‘மாமன்னன்’ படத்தை மக்கள் நிச்சயம் விவாதிப்பார்கள்: மாரி செல்வராஜ்

‘மாமன்னன்’ படம் முற்றிலும் வேறு செய்தியை பேசுகிறது. நிச்சயம் மக்கள் இந்தப் படத்தை விவாதிப்பார்கள் என்று இயக்குநர் மாரிசெல்வராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், முதல் காட்சிக்குப் பிறகு செய்தியாளர்களை ‘மாமன்னன்’ படக் குழு சந்தித்தது. அப்போது இயக்குநர் மாரி செல்வராஜ் கூறும்போது, “மாமன்னன் படம் முற்றிலும் வேறு செய்தியை பேசுகிறது. நிச்சயம் மக்கள் இந்தப் படத்தை விவாதிப்பார்கள். மாமன்னன் படம் எதை உணர்த்துகிறது, எதுவாக உள்வாங்கப்படுகிறது. இதை எல்லாம் மக்கள்தான் கூற வேண்டும். மக்கள்தான் படம் குறித்து பேச வேண்டும்.
இந்தக் கதையை எடுக்க முடியாதோ என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால், இது படமாக வெளி வந்ததற்கு உதயநிதிக்குதான் நன்றி சொல்ல வேண்டும். மேலும், இசையால் இந்தப் படத்தை தாங்கிப் பிடித்த ரகுமான் சாருக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி” என்றார்.

உதயநிதி கூறும்போது, “இந்தப் படத்தை மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினோம். இது ஆறு மாத கால உழைப்பு. எங்கள் உழைப்பை தற்போது மக்கள் கொண்டாடுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இதுவே என் கடைசி படம். இப்படமே என்னை பூர்த்தி செய்துவிட்டது” என்று தெரிவித்தார்.