நல்ல கதையும், எனக்கான ஸ்பேஸும் அமைந்தால் மீண்டும் காமெடியனாக நடிப்பேன் என்று நடிகர் சந்தானம் பதிலளித்துள்ளார்.
இயக்குநர் ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வரும் ஜூலை 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனை நடிகர் சந்தானம் கோவையில் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி படமாக இருக்கும். ஜாலியாக பார்த்துவிட்டு வரலாம். ஹீரோவாக இருக்கும்போது டயட் போன்ற விஷயங்களையெல்லாம் பின்பற்றி மெனக்கெட வேண்டியிருக்கிறது. அதுவே காமெடியன் சந்தானமாக இருந்தபோது ஜாலியாக எல்லோரையும் கலாய்த்து கொண்டிருக்கலாம். இரண்டையுமே நான் எஞ்சாய் செய்தேன்.
நல்ல கதை அமைந்து, அதில் எனக்கான ஸ்பேஸ் இருந்தால் மீண்டும் காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பேன். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்றைக்கு சினிமா மாறிவிட்டது. காமெடி ட்ராக் என்பது இல்லை. ஹீரோவும் காமெடியனும் சேர்ந்து பயணிப்பது, மல்டி ஸ்டார் படம் என திரைத் துறை மாற்றம் கண்டிருக்கிறது. இன்றைக்கு ட்ரெண்ட்டிங்கே மல்டி ஸ்டார் படங்கள்தான்.
எனது நடிப்பில் ‘வடக்கப்பட்டி ராமசாமி’, ‘கிக்’, ‘80ஸ் பில்டப்’ ஆகிய மூன்று படங்களும் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. என்னை பொறுத்தவரை, சீரியஸ் படங்களில் கவனம் செலுத்துவதை விட, திரையரங்குக்கு வரும் பார்வையாளர் ஜாலியாக சிரித்து வெளியே செல்ல வேண்டும் என்று தான் நினைப்பேன். ஆக, ஜாலியான படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.