ரஜினிகாந்த் பவுண்டேசன் பெயரில் போலி முகநூல் பக்கம் தொடங்கி மோசடியில் ஈடுபடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையின் அறங்காவலர் டி.எஸ்.சிவராமகிருஷ்ணன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
ரஜினிகாந்த் பவுண்டேசன் அறக்கட்டளை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து வருகிறோம். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் புகைப்படத்துடன், எங்கள் அறக்கட்டளை பெயரில் போலி முகநூல் பக்கம் தொடங்கி, ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் போலி பேஸ்புக் ஐடி உருவாக்கி 200 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு வழங்குவதாக கூறி ரூ. 2 கோடி வரை வசூல் செய்து மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் வந்துள்ளது. இது ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ரஜினிகாந்த் பவுண்டேசன் அறக்கட்டளைக்கும் அவமதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.