அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறி நடிக்கும்போது, ஒரு நடிகர் அரசியல்வாதியாவதில் எந்த தவறுமில்லை என்று நடிகர் விஷால் கூறினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் நேற்று (27-07-2023) முன்னாள் இந்திய குடியரசு தலைவரும் விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர். அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அரசியல் என்பது சமூக சேவை, வியாபாரம் கிடையாது. நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். நான் அரசியலுக்கு வருவது புதுசு கிடையாது. அரசியல்வாதிகள் நடிகர்களாக நடிக்கும் போது, நடிகர்கள் அரசியல்வாதிகளாவது தப்பு கிடையாது. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எல்லா அரசியல்வாதிகளும் சாதி, மதம், எல்லாமே பார்க்கிறார்கள். நடிகர்கள் அரசியலுக்கு வருவது மேற்கொண்டு நல்லது பண்ணலாம் என்கிற எண்ணத்தில் தான்.
தற்போதைய காலக்கட்டத்தில் சமூக வலைதளம், போதைப்பொருள், மது ஆகியவற்றிற்கு மாணவர்கள் அடிமையாகிவிட்டார்கள். இதை தவிர்த்து ஆரோக்கியமான வழியில் அவர்களது வாழ்க்கையை கொண்டு சேர்த்தார்கள் என்றால் அவர்கள் மூலம் ஒரு பத்து பேர் பயன்படுவார்கள். போதைப்பொருள் பயன்பாடு என்பது கொரோனாவிற்கு பின்னிருந்து அதிகரித்துள்ளது. அதை தடுப்பதற்கான வழிகளில் இறங்கியுள்ளோம். போதைப்பொருள் பயன்படுத்தும் போது ஏற்படும் சிறிய சந்தோஷத்திற்காக மக்கள் பலியாகின்றனர். ஒரு நல்ல விஷயத்திற்காக சமூக வலைதளத்தை பயன்படுத்துவது நல்லது.
மணிப்பூர் கொடூரம் பற்றி அரசுதான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தால் சாதி ரீதியாக ஓட்டு போய்விடும் என்று நினைக்காத ஒரு முதல்வர் இருந்தால்தான் அதைத் தடுக்க முடியும்.
நயன்தாரா எந்த பட புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார். அது அவரின் தனிப்பட்ட உரிமை. நீங்கள் வந்தே ஆகணும் என்று அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. நான் பள்ளித் தலைமை ஆசிரியர் கிடையாது. நடிகர் சங்க பொதுச்செயலாளர் தான். எனக்கு இஷ்டமில்லை என சொல்லுபோது நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், வந்தால் நல்லாயிருக்கும் படத்தின் புரொமோஷன்களில் நடிகர்கள் பங்கேற்பது தப்பே இல்லை. காரணம், தயாரிப்பாளர் ஒரு நடிகருக்கு தேவையான ஊதியத்தை கொடுத்திருக்கிறார். அப்போது தான் அவரது படம் ரசிகர்களிடையே சென்று சேரும் என்பதால் அழைக்கிறார். அப்படி புரொமோஷன்களில் கலந்துகொள்வது தப்பே கிடையாது. ஏசி ஹாலில்தான் நிகழ்ச்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.