ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை கடந்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கடந்த மாதம் இப்படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ பாடல் யூடியூபில் வெளியானது. இந்த பாடலும், தமன்னாவின் நடனமும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகின. ரீல்ஸ்களில் ஆயிரக்கணக்கானோர் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இப்பாடல் யூடியூபில் வெளியான நான்கு வாரங்களில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை கடந்துள்ளது. மேலும் 13 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. அத்துடன் இப்பாடல் ஸ்பாட்டிஃபை தளத்தில் 17 மில்லியன் முறையும், கூகுள் மியூசிக்கில் 10 மில்லியன் முறையும் கேட்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.