மருத்துவ சிகிச்சைக்காக ரூ.25 கோடி கடன் குறித்து நடிகை சமந்தா விளக்கம்!

மருத்துவ சிகிச்சைக்காக நடிகை சமந்தா ரூ.25 கோடி பணத்தை நடிகர் ஒருவரிடமிருந்து கடனாகப் பெற்றிருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகை சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த இவர் தான் கமிட்டான திரைப்படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து சமந்தா தற்போது மயோசிட்டிஸ் நோய்க்காக மீண்டும் சிகிச்சை எடுக்கவுள்ளதால் தற்காலிகமாக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சமந்தா இந்தோனேஷியாவின் பாலி தீவுக்குச் சுற்றுலா சென்றார். அங்கிருந்து இந்தியா திரும்பியதும் அவர் மயோசிட்டிஸ் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் மருத்துவச் சிகிச்சைக்காக பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடம் ரூ.25 கோடியை கடனாகப் பெற்றுள்ளதாக தகவல் பரவி வந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டோரியில், “மயோசிடிஸ் சிகிச்சைக்காக ரூ.25 கோடி வாங்கினேனா?. யாரோ தவறான தகவலை உங்களுக்கு தெரிவித்துள்ளனர். என் சிகிச்சைக்காக இதிலிருந்து ஒரு சிறிய தொகையை செலவிடுவது மகிழ்ச்சியே.
என்னுடைய வேலையிலிருந்து நான் பெற்ற பணம் மூலம் என்னை நானே கவனித்துக்கொள்ள முடியும். நன்றி. மயோசிடிஸ் நோயால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை தொடர்பான தகவல்களை பொறுப்புடன் வெளியிடுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.