நடிகர் விஜய், மக்கள் இயக்கம் சார்பில் பல திட்டத்தை தொடங்கி வருகிறார். இந்நிலையில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க விஜய் முடிவு செய்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக விரைவில் மாற்றும் நோக்கத்தில் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டங்களையும் நடிகர் விஜய் அறிவித்து வருகிறார். தமிழகம் முழுவதும் அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு என அரசியல் கட்சிகளுக்கு நிகராக மக்கள் இயக்கம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு ஏழை மாணவ- மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு தொகுதி வாரியாக தளபதி விஜய் பயிலகம் என்ற இரவு நேர பாடசாலை தொடங்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கறிஞர் அணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று தொடங்கியது. நாளை வரை இந்த கூட்டம் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 350-க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மக்கள் இயக்கத்தினருக்கும் ரசிகர்களுக்கும் சட்ட ஆலோசனைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான நேர்காணல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யவும் விஜய் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து திரும்பியதும் அந்த பட்டியலை அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் இரவு பாடசாலை திட்டம் போல் ஏழைகள் வசதிக்காக இலவச சட்ட உதவி மையம் விஜய்யின் ஆலோசனைப்படி அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது:-
விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு மக்கள் நல திட்டங்களை விஜய் ஆலோசனையின்படி சிறப்பான முறையில் செய்து வருகிறோம். ஏழை மாணவ -மாணவிகள் கல்வி பயில இரவு நேர பாடசாலை திட்டத்தை அறிமுகப்படுத்தி அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பயின்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறுவதற்காக இலவச சட்ட உதவி மையம் மாவட்டம் தோறும் விரைவில் மக்கள் இயக்கம் மூலம் தொடங்க உள்ளோம். அடுத்த வாரம் சென்னை ஐகோர்ட் அருகில் இந்த மையத்தினை தொடங்குகிறோம். முதலில் மாவட்டம் வாரியாக தொடங்கி அடுத்த கட்டமாக தொகுதி வாரியாக இந்த சட்ட உதவி மையம் விரிவுபடுத்தப்படும். ஏழைகள் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்த மையத்தின் மூலம் சட்ட ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.