தமிழ்நாட்டில் எவர் ஒருவரும் அவர்கள் விரும்பும் மொழியை கற்றுக் கொள்ளலாம்: சின்மயி!

தமிழ்நாட்டில் எவர் ஒருவரும் அவர்கள் விரும்பும் மொழியை கற்றுக் கொள்ளலாம் என்று பாடகி சின்மயி கூறியுள்ளார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என்ற பெயரில் இந்தியோ, சம்ஸ்கிருதமோ கற்றுக் கொள்ள கூடாது என்ற திணிப்பு இருந்தது. தமிழை வளர்க்க எவ்வுளவு அதிகாரம் இருக்க கூடுமோ அதே அளவுக்கு இந்தியோ சமஸ்கிருதமோ படிக்க கூடாது என்று தடுக்க கூடாது. என் வாழ்நாள் அனுபவத்தில் சொல்கிறேன் இந்தி, சமஸ்கிருதத்தை தமிழ்நாட்டில் படிக்க விடாமல் தடுத்தார்கள் என திமுகவை குற்றம்சாட்டி பேசி இருந்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில் பாடகி சின்மயி நிர்மலா சீதாராமனின் பேச்சை சுட்டிக்காட்டி டுவீட் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

சென்னை மற்றும் தமிழ்நாட்டில் யார் ஒருவரும் அவர்கள் விரும்பும் மொழியை கற்றுக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் உள்ள தஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபாவில் அதிக அளவில் இந்தி கற்பவர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பதுதான் உண்மையனா புள்ளிவிவரம். தமிழ்நாட்டில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் இந்தி படித்த டாப்பர்கள் உள்ளனர்.

நான் இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கை இரண்டாவது மொழியாக கற்றேன். சென்னையில் ஜெர்மன், பிரஞ்சு மொழிகளை கூட கற்றேன். என் உறவினர் துலு, படகா உடன் தமிழ் மற்றும் இந்தியையும் பேசுவார்.

மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரி 1906ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சமஸ்கிருதம் என்பது பலருக்கு மிகவும் கடினமான மொழியாகும். எனது வகுப்பில் இந்தியை தாய் மொழியாக கொண்டவர்களும் பயின்றனர்.

தென்னிந்தியாவில் நிலவும் தாய் மொழிச் செல்வாக்கு, இந்தியை இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாக படித்தவர்கள் அதை பேசுவதற்கு தடையாக இருந்ததது. இதனால் இந்தி பேசுபவர்கள் கேலி செய்யப்பட்டது ஒரு காரணம். இங்கு வரலாற்று ரீதியாக கிளர்ச்சிக்கு ஒரு உண்மையான காரணம் இருந்தது ஏன் என்பதை நாம் அறிந்து கொள்வது நல்லது. இவ்வாறு சின்மயி கூறியுள்ளார்.