எங்கள் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்து பசியின்றி படிக்கலாம்: விஜய் ஆண்டனி!

இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1-5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்த மகத்தான திட்டத்தைச் செயல்படுத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி அறிவித்தார். அந்த வகையில் முதல் கட்டமாக, சில மாநகராட்சிகள், நகராட்சிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த 2022 செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில், மதுரை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த மார்ச் 1ஆம் தேதி இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 பேர், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 பேர், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 பேர், 237 தொலைதூர, மலைப்பிரதேச பள்ளிகளில் 10,161 பேர் என மொத்தம் 1,545 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளுக்கு இத்திட்டம் இன்று முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இன்று முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் திருக்குவளையில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கினார். அதேபோல, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாள்தோறும் 17 லட்சம் மாணவர்கள் பள்ளியிலேயே காலை உணவு சாப்பிட்டு பயன் பெறுவார்கள். இதற்காக ரூ.404 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பசியின்றி படிப்பில் கவனம் செலுத்திடும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கான இந்த காலை உணவுத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியும் பாராட்டு தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எங்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் இப்போது தங்கள் வளாகத்தில் நல்ல, சத்தான காலை உணவைப் பெறுவார்கள். தமிழகம் இதுபோன்ற திட்டங்களில் கவனம் செலுத்தி வருவதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்து பசியின்றி படிக்கலாம். அருமையான திட்டம். முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.