பாபாசாஹேப் இயற்றிய சட்டத்தை மாற்ற நினைப்பவர்கள் எப்படி ஜெய் பீம்-ஐ கொண்டாடுவார்கள் என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அடங்கிய திரைத் துறை சார்ந்தவர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது. இதில் தேசிய விருது வென்றவர்களுக்கு பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்தி வருகின்றனர்.
இந்த முறை தேசிய விருது அறிவிக்கப்பட்டதும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படங்களுக்கு விருது அறிவிக்கப்படாததற்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சூர்யா, மணிகண்டன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படவில்லை. ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் படத்திற்கு, நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் என பலதரப்பட்டோர் கூறி வந்தனர். தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது வழங்காதது குறித்து ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் ஏமாற்றம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், நடிகர் பிரகாஷ் ராஜ் ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படாதது குறித்து காட்டாமாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் பதிவில், “காந்தியை கொன்றவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போர், பாபாசாஹேப் இயற்றிய சட்டத்தை மாற்ற நினைப்பவர்கள் எப்படி ஜெய் பீம்-ஐ கொண்டாடுவார்கள்” என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்து இருக்கிறார்.