என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியதாக வெளியான தகவல் உண்மைக்கு மாறானது: வரலட்சுமி

போதைப் பொருள் கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டின் திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள், வெளிநாட்டவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தலில் தொடர்புள்ளவர்கள்; இதன் மூலமான பணத்தை வைத்து இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கின்றனர் என்ற தகவல் என்.ஐ.ஏ.வுக்கு கிடைத்தது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கேரளாவில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் சிக்கிய சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இவ்வழக்கில் ஈழத்தை சேர்ந்த குணா, புஷ்பராஜ், அஸ்மின் உள்ளிட்ட 13 பேர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். அதில் போதைப் பொருட்கள், ஆயுதங்கள் மூலமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் குறித்து விவரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான குணாவின் கூட்டாளி ஆதிலிங்கம் என்ற லிங்கம் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். இந்த ஆதிலிங்கம், நடிகை வரலட்சுமியின் உதவியாளர் எனவும் கூறப்பட்டது. போதைப் பொருட்கள், ஆயுத கடத்தல்கள் மூலம் கிடைத்த பணத்தை ஆதிலிங்கம் திரைத்துறையில் முதலீடு செய்திருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து ஆதிலிங்கம் குறித்து தகவல்களை பெற நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. ஆனால் இப்படி ஒரு சம்மனை என்.ஐ.ஏ. தமக்கு அனுப்பவில்லை என நடிகை வரலட்சுமி மறுத்துள்ளார்.

இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் விளக்க அறிக்கை ஒன்றை வரலட்சுமி வெளியிட்டுள்ளார். அதில், என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியதாக வெளியான தகவல் உண்மைக்கு மாறானது; வதந்தி. ஆதிலிங்கம் என்பவர் 3 ஆண்டுகள் மட்டும் ப்ரீலேன்ஸ் மேலாளராக பணிபுரிந்தார். அதே கால கட்டத்தில் பலரும் மேலாளர்களாக பணிபுரிந்தும் இருக்கின்றனர். அதன் பின்னர் எனக்கும் ஆதிலிங்கத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. எனக்கும் ஆதிலிங்கம் கைது செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியாக இருந்தது. தேவைப்பட்டால் அரசுக்கு ஒத்துழைப்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான் என விளக்கம் அளித்துள்ளார் நடிகை வரலட்சுமி.