காதல் செத்துப் போன பிறகு எப்படி நண்பர்களாக இருக்க முடியும்: சோனியா அகர்வால்

கணவன், மனைவியாக இருந்தவர்களால் விவாகரத்திற்கு பிறகு நண்பர்களாக இருக்க முடியாது. காதல் செத்துப் போன பிறகு எப்படி நண்பர்களாக இருக்க முடியும் என்று இயக்குநர் செல்வராகவனை பிரிந்தது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் சோனியா அகர்வால்.

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் சோனியா அகர்வால். முதல் தமிழ் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடித்தார். செல்வராகவனுக்கும், சோனியா அகர்வாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. காதலை வீட்டில் சொல்லி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தினார் சோனியா அகர்வால். திருமணமான 4 ஆண்டுகளில் செல்வராகவனும், சோனியா அகர்வாலும் பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.

சோனியா அகர்வாலை பிரிந்த பிறகு கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். அவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சோனியா அகர்வால் சிங்கிளாக இருக்கிறார். செல்வராகவனை பிரிந்த பிறகு மீண்டும் படங்ளில் நடிக்கத் துவங்கிவிட்டார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் விவாகரத்து குறித்து பேசியிருக்கிறார் சோனியா அகர்வால். அவர் கூறியதாவது:-

செல்வராகவனும், நானும் ஏன் பிரிந்தோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். ஒரு இயக்குநராக அவருக்கு பிடிவாதம் அதிகம். ஆனால் வீட்டில் அப்படி இல்லை. அமைதியாக இருப்பார். எப்பொழுதும் கதை எழுதிக் கொண்டிருப்பார். கணவன், மனைவியாக இருந்தவர்களால் விவாகரத்திற்கு பிறகு நண்பர்களாக இருக்க முடியாது. காதல் செத்துப் போன பிறகு எப்படி நண்பர்களாக இருக்க முடியும். இனி அவர் முகத்தையே பார்க்க மாட்டேன். எங்களுக்கு திருமணமான பிறகு இனி நீ படங்களில் நடிக்கக் கூடாது என அவரின் குடும்பத்தார் கட்டாயப்படுத்தினார்கள். அதனால் படங்களில் நடிப்பதை நிறுத்தினேன். தற்போது நான் மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டேன் என்றார்.