தமிழ்நாட்டில் இருந்து சிறந்த படங்கள் வெளியாகின்றன: ஷாருக்கான்!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது. கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றுள்ள அட்லீக்கு, இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லீ அதிகபட்சமாக இதுவரை விஜய் நடிப்பில் 3 படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், ஷாருக்கானின் ஜவான் உருவாகவும் விஜய்ண்ணா தான் காரணம் என அட்லீ மனம் திறந்துள்ளார். ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ, ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல அறிமுகம் கொடுத்ததால், இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் இணைந்தார். விஜய் – அட்லீ கூட்டணியில் முதலில் வெளியான தெறி, வெறித்தனமான ஹிட் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மெர்சல், பிகில் என விஜய்யுடன் மீண்டும் மீண்டும் கூட்டணி வைத்தார் அட்லீ. தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களுமே விஜய்க்கு பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய ஓபனிங் கொடுத்தது. இதனால், விஜய்யின் அன்புத் தம்பிகளின் பட்டியலில் அட்லீயும் இணைந்தார். அதேநேரம் அட்லீயின் மேக்கிங் பார்த்து வியந்த ஷாருக்கான், அவரை பாலிவுட் அழைத்துச் சென்றார். அப்படியாக ஷாருக்கான் – அட்லீ காம்போவில் உருவான ஜவான், செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது.

இதனையடுத்து நேற்று ஜவான் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அட்லீ, “ஜவான் உருவாக விஜய்ண்ணா தான் காரணம். அவர் கொடுத்த தன்னம்பிக்கையால் தான் இந்தப் படத்தை இயக்கினேன்” எனக் கூறினார். மேலும், “13 ஆண்டுகளுக்கு முன்னர் எந்திரன் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்த போது, ஷாருக்கான் சார் வீட்டின் முன்பு நின்று போட்டோ எடுத்தேன். ஆனால், இப்போது அவரை வைத்து படம் இயக்கியதோடு, ஒன்றாக ஒரே காரில் பயணித்துள்ளேன்” என நெகிழ்ச்சியாக பேசினார்.

ஜவான் பேச்சுவார்த்த நடந்துகொண்டிருக்கும் போது, யாரை நாயகியாக நடிக்க வைக்கலாம் என ஷாருக்கான் கேட்டார். அப்போது எனக்கு என் டார்லிங் நயன்தாரா தான் நினைவில் வந்தார். அதனை அப்படியே ஷாருக்கான் சாரிடம் சொன்னதும், அவரும் ஓக்கே சொல்லிவிட்டதாக அட்லீ கூறியுள்ளார். அதேபோல், நம்மை சுற்றி நிறைய நெகட்டிவிட்டி வரும், ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வேலையில் கவனம் செலுத்தினால் போதும், வெற்றி தானாக வந்து சேரும் என தலைவர் ஸ்டைலில் பஞ்ச் வைத்து மாஸ் காட்டினார்.

இசை வெளியீட்டு நிகழ்வில் ஷாருக்கான் பேசியதாவது:-

நான் என் வாழ்வில் ஒரு படத்துக்கான நிகழ்ச்சியை கூட தமிழ்நாட்டில் நடத்தியதில்லை. தமிழ்நாட்டில் இருந்து சிறந்த படங்கள் வெளியாகின்றன. ‘ஹே ராம்’ படத்தில் நான் தமிழில் பேசியிருந்தேன். விஜய் சேதுபதியிடமிருந்து நான் நிறைய கற்றுகொண்டேன். விஜய் சேதுபதி நீங்கள் என்னை பழிவாங்கலாம்; ஆனால் என்னை விரும்பும் பெண் ரசிகைகளை நீங்கள் எடுத்துகொள்ள முடியாது. அனிருத் என் மகனைப் போன்றவர். ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலிலிருந்து அனிருத்தை கவனித்து வருகிறேன். ஒரு இந்தி, ஒரு தமிழ் பாடலுக்கு மட்டும் அனிருத்தை இசையமைக்க வைக்கலாமா என அட்லீ கேட்டார். ஏன் ஒரு பாடலுக்கு மட்டும், மொத்தப் படத்துக்கும் அவரே இசையமைக்கட்டுமே என்று சொன்னேன்.

நான் ஷோபி மாஸ்டரிடம் எனக்கு கடினமான ஸ்டெப்பை கொடுக்காதீர்கள் என்றேன். காரணம் நான் விஜய் மாதிரி நடனமாட மாட்டேன் என்றேன். என்னை நடனமாட வைத்துவிட்டார் ஷோபி மாஸ்டர்” என்றார். தொடர்ந்து படக்குழுவினருக்கு தமிழில் பட்டங்களை வழங்கி பேசிய ஷாருக்கான், “நான் தமிழில் அட்லீயை ‘மரண மாஸ்’ என்றுதான் வாழ்த்த முடியும். ‘கம்பீரமான’ முத்துராஜ், ‘விறுவிறுப்பான’ ரூபன், ‘அட்டகாசமான’ விஜய் சேதுபதி, ‘வித்தைக்காரன்’ அனிருத், ‘வசீகரமான’ நயன்தாரா” என பலருக்கும் பட்டப் பெயர் வைத்துப் பேசினார் ஷாருக்.

முன்னதாக பேசிய விஜய் சேதுபதி, “நான் சிறுவயதிலிருந்தே ஒரு சேட்டு பெண்ணை காதலித்தேன். அவர் ஷாருக்கானை விரும்புவதாக கூறிவிட்டார். அப்போதிலிருந்தே ஷாருக்கானை பழிவாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்கு இத்தனை நாட்கள் ஆகிவிட்டது. அவர் என்னை நல்ல நடிகர் என சொன்னபோது ஷாக் ஆகிவிட்டேன்” என கலகலப்பாக பேசினார்.