இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் இதுவரை எந்தவொரு தமிழ் சினிமாவும் செய்யாத இமாலய வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 148.5 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸின் நம்பர் ஒன் நாயகன் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். இதுவரை நடிகர் விஜய் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கவில்லையே என கலாய்த்தவர்கள் லியோ படத்தின் முதல் நாள் வசூல் மூலமாக தரமான பதிலடி கொடுத்துள்ளார். விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கம், மிகப்பெரிய காஸ்டிங் மற்றும் தளபதி விஜய்யின் வெறித்தனமான நடிப்பு என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தியேட்டர் பக்கம் அழைத்துக் கொண்டு வந்ததன் விளைவு தான் இப்படியொரு வசூல் வேட்டை என்கின்றனர்.
நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு கடைசி வரை ஏகப்பட்ட சர்ச்சைகளும் பிரச்சனைகளும் வெடித்தன. இறுதி வரை படம் சுமூகமாக ரிலீஸ் ஆகுமா என்கிற சிக்கல் நிலவி வந்தது. அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை, ஆடியோ லான்ச் ரத்து, ரோகிணி தியேட்டர் இருக்கைகள் சேதம், கடைசி வரை தியேட்டர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஷேர் பங்கீட்டில் பிரச்சனை என பல கத்தி குத்தினாலும், இந்த கத்தி வேற ரகம் என காட்டி உள்ளார் நடிகர் விஜய்.
பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்களே 140 கோடி வசூலை லியோ ஈட்டியிருக்கும் என கணித்து வந்த நிலையில், அனைத்து ரெக்கார்டுகளையும் உடைத்து புதிய ரெக்கார்டு மேக்கராக விஜய் லியோ படத்தின் மூலம் விஸ்வரூபம் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக உலகளவில் 148.5 கோடி ரூபாயை லியோ வசூல் செய்துள்ளது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது.