ரிலீஸ் தேதியுடன் வெளியான துருவ நட்சத்திரம் பட ட்ரெய்லர்!

படம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் ஒரு வழியாக ரிலீஸுக்கு தயாராகியுள்ளது துருவ நட்சத்திரம். ஹாலிவுட் பட ஸ்டைலில் தெறிக்கவிடும் ஆக்‌ஷன், மேக்கிங் ஸ்டைலில் இருக்கும் ட்ரெய்லர் படம் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெளதம் மேனன் – விக்ரம் கூட்டணியில் உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்படடுள்ளது. தீபாவளிக்கு பின் அடுத்த வாரத்தில் இந்தப் படம் வெளியாகிறது. அத்துடன் இந்த ஆண்டில் வெளியாகும் மற்றொரு பெரிய படமாக துருவ நட்சத்திரம் உள்ளது. இந்தப் படத்துக்கு துருவ நட்சத்திரம் சேப்டர் 1 – யுத்த காண்டம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. எனவே துருவ நட்சத்திரம் பிரான்சைஸில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகும் என தெரிகிறது.

இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். ஆர். பார்த்திபன், ராதிக சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, அர்ஜுன் தாஸ், வம்சி கிருஷ்ணா, மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாச்சலம் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். படத்துக்கு ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா, எஸ் ஆர் கதிர் ஆகியோர் செய்துள்ளனர். கூடுதல் ஒளிப்பதிவாக ஜோமோன் டி. ஜான், சந்தான கிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோர் செய்துள்ளனர். இசை – ஹாரிஸ் ஜெயராஜ். ஒண்ட்ராகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இயக்குநர் கெளதம் மேனன் படத்தை தயாரித்துள்ளார்.

கடந்த 2013இல் சூர்யாவை வைத்து இந்தப் படத்தை தொடங்கினார் இயக்குநர் கெளதம் மேனன். படம் தொடர்பாக போஸ்டர்களும் வெளியாகி வைரலானது. அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக படத்திலிருந்து விலகுவதாக சூர்யா அறிவித்த நிலையில், படத்தை கிடப்பில் போட்டு அடுத்து அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து மீண்டும் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை 2016இல் உருவாக்கினார். 2017இல் படத்தின் முதல் டீஸரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதன் பின்னர் பல்வேறு காரணங்களால் படம் நிறுத்தப்படுவதும், தொடர்வதுமாக இருந்தது.

இந்த படம் உருவான காலகட்டத்தில் கெளதம் மேனன் 5 படங்களையும், ஓடிடி தளத்துக்காக 2 படங்களையும் இயக்கியுள்ளார். அத்துடன் பல படங்களில் நடிகராகவும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார்.
ஒரு வழியாக நிறுத்தப்பட்டிருந்த படத்தை மீண்டும் தொடங்கி கடந்த பிப்ரவரியில் ஷுட்டிங்கை முடித்து தற்போது படத்துக்கு ஏற்பட்டிருந்த பைனான்ஸ் பிரச்னையும் முழுவதுமாக தீர்க்கப்பட்டு ரலீஸுக்கு ரெடி செய்துவிட்டார் கெளதம் மேனன். நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து ஹாலிவுட் ஸ்டைலில் ஆக்‌ஷன் ஸ்பை த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.