நாளை காலை 11 மணிக்கு இந்தியன் 2 அப்டேட்!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்நிலையில் நாளை (அக்.29) காலை 11 மணிக்கு இந்தியன் 2 அப்டேட் வெளியாகும் என படக்குழு வித்தியாசமாக அறிவித்துள்ளது.

கமல் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் இந்தியன். 1996ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் கமலின் இந்தியன் தாத்தா கேரக்டரான சேனாபதி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதன்பின்னர் கமல் – ஷங்கர் கூட்டணி மீண்டும் இணையாமல் இருந்தது. ஆனால், 2017ல் இந்தியன் 2 ப்ராஜ்கெட் மூலம் மீண்டும் இணைந்தனர். லைகா தயாரிப்பில் கமல் – ஷங்கர் கூட்டணியில் தொடங்கிய இந்தியன் 2, அடுத்தடுத்து பல பிரச்சினைகளை சந்தித்தது. பைனான்ஸ் பிரச்சினை, கிரேன் விபத்தில் மூன்று உதவி இயக்குநர்கள் மரணம் என ஒருகட்டத்தில் இந்தியன் 2 தடுமாறி நின்றது. ஆனால், கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் கமலுக்கு செம்ம கம்பேக் கொடுத்தது. இதனால், உடனடியாக இந்தியன் 2 படப்பிடிப்பை விட்ட இடத்தில் இருந்து தொடங்கினார் ஷங்கர். அதன்படி, அசுர வேகத்தில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பு, சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. அதோடு கமலும் தனது போர்ஷனுக்கு டப்பிங் கொடுக்கத் தொடங்கினார். இதனால் இந்தியன் 2 விரைவில் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகின. இரண்டாம் பாகத்தில் கமலின் இந்தியன் தாத்தா கெட்டப் செம்ம மிரட்டலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால், ரசிகர்களிடமும் அதிக ஹைப் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் மிக முக்கியமான அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. “Received copy & processing..” என்ற கேப்ஷனுடன் தரமான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அதில், சேனாபதி கேரக்டரின் கையெழுத்தும் இருப்பதால், கமல் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். இது இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதியாக இருக்கலாம் எனவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேநேரம், இந்தியன் 2 ரிலீஸ் தேதியாக இல்லையென்றால், கமலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது ப்ரொமோ டீசர் ஏதேனும் வெளியாக வாய்ப்பிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.