நடிகர் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படத்திற்கு சென்சார் சான்று கிடைத்துள்ளது.
இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 25ஆவது படமாக உருவாகியுள்ளது, ஜப்பான் திரைப்படம். வரும் 10ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இப்படம் ரிலீஸாகிறது. இப்படத்தில் நடிகர் கார்த்தியுடன், அனு இம்மானுவேல், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் சென்னையில் பெரியளவில் நடைபெற்றது. இப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா, சத்யராஜ், விஷால், ஆர்யா, சிபிராஜ், தமன்னா, இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் சிறுத்தை சிவா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஹெச்.வினோத் ஆகியோர் கலந்துகொண்டு நடிகர் கார்த்தியை வாழ்த்தினர்.
அவ்விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, ’மணிரத்னத்தின் உதவி இயக்குநர் முதல் சினிமாவில் 25ஆவது படம் வரை வந்துள்ளேன். இதற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பும் ஆதரவும் முக்கியக் காரணம்’ என்றார். மேலும் ராஜூ முருகனிடம் தனக்கு கதை இருக்கிறதா எனக்கேட்டு வாங்கி நடித்ததாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இப்படத்திற்கு யூ/ஏ சென்சார் கிடைத்துள்ளது. இப்படத்தின் முதல்பாடலாக சில நாட்களுக்கு முன்பு, டச்சிங் டச்சிங் பாடல் வெளியான நிலையில் சொட்டங்கல்லா என்னும் இரண்டாவது பாடலும் வெளியாகியுள்ளது.