‘கொரோனா குமார்’ படத்தில் நடித்து முடிக்காமல் மற்ற படங்களில் நடிப்பதற்கு சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வேல்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ‘கொரோனா குமார்’ என்ற பெயரில் படம் தயாரிக்க முடிவு செய்து, நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு 9.5 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு, 4.5 கோடி ரூபாய் முன்பணமாக கடந்த 2021ம் ஆண்டு அளிக்கப்பட்டதாகவும், பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டுமென கோரி வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது , இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிலம்பரசன் மற்றும் வேல்ஸ் நிறுவனம் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சமர்பிக்கப்பட்டது. அதில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஒப்பந்தத்தில் உள்ள படி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போத நடிகர் சிம்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுப்படி, ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்ததற்கான ரசீதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனையடுத்து, அந்த டெபாசிட் செய்யப்பட்ட தொகை இரண்டு மாதங்களுக்கு மட்டுமே செல்லும் என தெரிவித்த நீதிபதி இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராக மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜாவை நியமித்து உத்தரவிட்டார்.
மேலும், கொரோனா குமார் படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டுமென்ற வேல்ஸ் நிறுவன கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி வெளிநாடு செல்வதற்கோ அல்லது வேறு படங்களிலோ நடிப்பதற்கு தடை விதித்தால் மற்ற நிறுவனங்களுடன் தொழில் ரீதியாக அவர் மேற்கொண்ட பணிகளை பாதிக்கும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.