தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ பண்பு: த்ரிஷா

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியிருந்தார். இந்தச் சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், த்ரிஷாவிடம் மன்சூர் அலிகான் மன்னிப்புக் கேட்டார். இதனையடுத்து தற்போது மன்சூர் அலிகானை மன்னிப்பதாக த்ரிஷாவும் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்த லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். லலித் குமார் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம், கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது கடும் சர்ச்சையானது. சமீபத்தில் தனது சரக்கு படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மன்சூர் அலிகான், “லியோ படத்தில் த்ரிஷாவை ரேப் செய்யும் சீன் இருக்கும் என எதிர்பார்த்தேன். அவரை அப்படியே தூக்கிச் சென்று பெட்டில் போடுவதை போல காட்சி வைக்காமல் லோகேஷ் கனகராஜ் ஏமாற்றிவிட்டதாக” பேசியிருந்தார். மேலும், இப்போதெல்லாம் வில்லன் நடிகர்களுக்கு ரேப் சீனில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மன்சூர் அலிகானின் இந்த பேச்சு கடும் சர்ச்சையானது. இதனையறிந்த த்ரிஷா, மன்சூர் அலிகானை கடுமையாக சாடியிருந்த த்ரிஷா, இனி மன்சூர் அலிகானுடன் நடிக்க வாய்ப்பே இல்லை எனவும் கூறியிருந்தார். மேலும், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகைகள் குஷ்பூ, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து மன்சூர் அலிகான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என நடிகர் சங்கமும் வலியுறுத்தியது. ஆனால், தான் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என சவால் விட்டார் மன்சூர் அலிகான். அதுமட்டும் இல்லாமல் மீண்டும் மீண்டும் தனது பேச்சை நியாயப்படுத்தி வந்தார்.

இதனிடையே மன்சூர் அலி கான் மீது காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மன்சூர் அலிகான் – த்ரிஷா விவகாரம் மேலும் மேலும் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே சென்றது. இந்நிலையில் த்ரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டார் மன்சூர் அலிகான். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த அவர், இறுதியாக “எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக” என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து தற்போது த்ரிஷாவும் மன்சூர் அலிகானை மன்னிப்பதாக டுவீட் செய்துள்ளார். “தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ பண்பு” என ஒரே வரியில் மன்சூர் அலிகானை மன்னித்துள்ளார். த்ரிஷாவின் இந்த டுவிட்டர் பதிவின் மூலம் மன்சூர் அலிகானின் பஞ்சாயத்து முடிவுக்கு வந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் த்ரிஷா தொடர்பாக சர்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மன்சூா்அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிா் ஆணையம் கடந்த 20-ஆம் தேதி பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், மன்சூா் அலிகான் மீது, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிா் காவல் துறையினர் இரு பிரிவுகளின் கீழ் கடந்த 21-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக விசாரணை நடத்த மன்சூா் அலிகானுக்கு காவல் துறையினர் அழைப்பாணை அனுப்பினா். அதன்படி, நேற்று (நவ.23) பிற்பகல் 2.45 மணியளவில் ஆயிரம் விளக்கு மகளிா் காவல் நிலையத்தில், ஆய்வாளா் தனலட்சுமி முன்னிலையில் நடிகா் மன்சூா் அலிகான் ஆஜரானாா்.

இந்நிலையில், மன்சூா் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.