நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மன்சூர் அலிகான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் த்ரிஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லியோ. இந்த படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்பட நடிகர், நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் தான் சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் அளித்த ஒரு பேட்டியில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதாவது “லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது. குஷ்பு, ரோஜாவை மெத்தையில் போட்டதுபோல் த்ரிஷாவை போட முடியவில்லை” என பொருள்படும்படி அவர் கூறியது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது. இதற்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனத்தை பதிவு செய்தார். அதோடு மன்சூர் அலிகான் உடன் இனி நடிக்கப்போவது இல்லை என அறிவித்தார். அதைத்தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகானுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்பட பல திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மன்னிப்பு கேட்கும்படி வலியுறுத்தினர்.
ஆனால் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரவில்லை. இதையடுத்து இந்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையம் வரை சென்றது. சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சார்பில் சென்னை போலீசாருக்கு உத்தரவு வந்தது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 354 ஏ, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பிய போலீசார் அவரை நேரில் வரவழைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே தான் தற்போது சென்னை ஆயிரம் விளக்கும் மகளிர் காவல்துறை சார்பில் நடிகை த்ரிஷாவுக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதாவது மன்சூர் அலிகான் விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு நடிகை த்ரிஷா அளிக்கும் விளக்கத்தை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது பாயும் என கூறப்படுகிறது.