ஆருத்ரா மோசடி: ஆர்.கே.சுரேஷுக்கு எதிரான லுக்அவுட் நோட்டீஸை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாக வைத்துச் செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இவர்கள் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி, ரூ.2,438 கோடி மோசடி செய்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து அவர்கள் முதலீடுகளைப் பெற்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு பிரிவு போலீசார் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் பலர் கைதும் செய்யப்பட்டனர்.

இந்த ஆருத்ரா மோசடியில் சினிமா நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவரான ஆர்.கே. சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ஆர்.கே. சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பினர். இருப்பினும் அவர் ஆஜராகவில்லை. ஆர்.கே. சுரேஷ் துபாய் நாட்டுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.கே. சுரேஷ் மனுத் தாக்கல் செய்தார். அதில், ஆருத்ரா மோசடிக்கும், தனக்கும் தொடர்பில்லை எனவும் மனைவி மற்றும் குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்காகத் துபாயில் இருப்பதாகவும், நாடு திரும்பினால் கைது செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்ததுடன், சென்னை திரும்பி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி டிசம்பர் 10ஆம் தேதி சென்னை திரும்பிய ஆர்.கே.சுரேஷ், 12 மற்றும் 13ஆம் தேதிகளில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரி முன்பு விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் லுக் அவுட் நோட்டீசை எதிர்த்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆர்.கே.சுரேஷ் அளித்த வாக்குமூலம், ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருவதாகவும், விசாரணைக்குத் தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்.கே.சுரேசுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்த நீதிபதி, மீண்டும் விசாரணை தேவைப்பட்டால் புதிதாகச் சம்மன் அனுப்பும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.