பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்!

கடந்த 30 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் போண்டா மணி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி நேற்று இரவு காலமானார். அவரின் மறைவை அடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் சோகத்தில் இருக்கின்றனர்

1963 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தார் போண்டா மணி. அவரது இயற்பெயர் கேதீஸ்வரன். இலங்கையில் பிறந்து வளர்ந்த கேதீஸ்வரன் என்கிற போண்டா மணி சிங்கப்பூரில் சில காலம் வேலை பார்த்து வந்தார். அந்த சமயத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த போண்டா மணிக்கு இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் பழக்கம் கிடைத்தது. அதன் மூலம் பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் போண்டா மணி. அவருக்கு போண்டா மிகவும் பிடிக்கும் என்பதால் அவருக்கு போண்டா மணி என பெயர் வந்தது. நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் தீவிரமான ரசிகர் தான் போண்டா மணி.

அவரை மானசீக குருவாக போண்டா மணி ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த போண்டா மணிக்கு வடிவேலுவின் பழக்கம் கிடைக்கவே அவருடன் இணைந்து பல படங்களில் நடித்தார். அடிச்சுக்கூட கேட்பாங்க அப்போவும் சொல்லிடாதீங்க, மூஞ்சில என்ன தக்காளி சட்னி என அவர் பேசிய பல வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமானதாக உள்ளது.

நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள போண்டா மணி கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி நேற்று இரவு 11 மணியளவில் அவரது வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.ஆனால் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியிலேயே போண்டா மணியின் உயிர் பிரிந்துள்ளது. 60 வயதாகும் போண்டா மணிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவரின் பிரிவை கேட்டு ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை அனைவரும் சோகத்தில் இருக்கின்றனர்.