கேப்டன் மில்லர் படத்தின் விழாவில் மறைந்த கேப்டன் விஜயகாந்த், புனித் ராஜ்குமார் ஆகியோருக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார். இப்படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் இரண்டு பாகங்கள் 1940 மற்றும் 1990 களில் நடப்பது போன்றும் மூன்றாம் பாகம் தற்போது நடப்பது போன்றும் வெளியாக இருக்கிறது. இந்த படம் தனுஷின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக உருவாகியுள்ளது. அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் எகிரிக்கொண்டே போகிறது. அந்த வகையில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
பீரியட் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படமானது பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த பொங்கலுக்கு கடுமையான போட்டி நிலவிவருகிறது. கேப்டன் மில்லருக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் திரைப்படமும் வெளியாகிறது. தனுஷால்தான் சிவகார்த்திகேயன் சினிமாவுக்குள் வந்தவர். தற்போது இரண்டு பேரின் படங்களுமே ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் இந்த ரேஸில் யார் வெல்வார் என்ற ஆவல் ரசிகர்களிடையே உருவாகியிருக்கிறது.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் பேசிய தனுஷ், “கேப்டன் மில்லர் படத்துக்கு அருண் மாதேஸ்வரன் வைத்திருக்கும் டேக் லைன், ‘Respect is Freedom’ என்பதுதான். அதாவது மரியாதைதான் சுதந்திரம். ஆனால் இங்கு மரியாதை எதற்கு இருக்கிறது, யாருக்கு இருக்கிறது. யாருக்கு சுதந்திரம் இருக்கிறது என்று தெரியவில்லை. எதை செய்தாலும் யோசித்து யோசித்து செய்ய வேண்டியதாக உள்லது. அப்படியே யோசித்து பேசினாலும் செய்தாலும்; அது நல்லதாகவே இருந்தாலும் அதை குறை சொல்வதற்கு ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது. சின்ன கூட்டம்தான் அது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. குறை சொல்லிவிட்டு, கை காட்டிக்கொண்டு இருப்பதுதான் சுதந்திரமா என்ன?.. அது சுதந்திரம் கிடையாது. சுதந்திர துஷ்பிரயோகம்.
அவன் நல்லவன், இவன் கெட்டவன், அது உனக்கு, இது எனக்கு என்று ஏன் சொல்கிறீர்கள். கடவுள் முடிவு செய்யட்டுமே.அப்போது பார்த்துக்கொள்ளலாம். எது எதற்காகவோ ஓடுகிறோம். ஆட்டமாக ஆடுகிறோம். நம்முடைய முதன்மை தேவை என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளும்போது இதற்கெல்லாம் முக்கியத்துவம் இல்லாமல் போகும். என்னுடைய முதன்மை தேவை என்ன என்பதில் நான் தெளிவாக இருந்தேன். கேப்டன் மில்லர் ஒரு சர்வதேச படமாக இருக்கும். புதிதான முறையில் இந்தப் படத்தை அருண் ட்ரை செய்திருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
முன்னதாக, கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும் இயக்குநர் மாரி செல்வராஜும் கலந்துகொண்டார். இதில், நிகழ்ச்சியின் தொடக்கமாக அண்மையில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொடங்கியது. கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு தனுஷ் நேரில் செல்லவில்லை என்ற விமர்சனம் எழுந்திருந்த சூழலில் அவர் தனது இசை வெளியீட்டு விழாவில் தனது அஞ்சலியை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.