‘லால் சலாம்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

‘லால் சலாம்’ படத்தின் ரிலீஸ் தேதியை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தளத்தின் மூலம் அறிவித்துள்ளாா்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாா். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 9ஆம் தேதி ‘லால் சலாம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீஸ் தேதி போஸ்டரை ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளாா். பொங்கல் விடுமுறைக்கு லால் சலாம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.