டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்: மன்சூர் அலிகான்!

அமமுக கட்சியின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வரும் மே மாதம் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அனைத்து கட்சிகளும் தொடங்கி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 2வது அணியாகவும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 3வது அணியாகவும், சீமானின் நாம் தமிழர் கட்சி 4வது அணியாகவும் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இதில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டுள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி அணியாக களமிறங்க திட்டமிட்டு வருகிறது. இதற்கு தனியாக கூட்டணி அமைக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அதிமுகவுக்கு பதிலாக அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்டோருடன் சேர்ந்து பாஜக களமிறங்கலாம் என கூறப்படுகிறது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் களமிறங்கினால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என நடிகரும், தமிழ் தேசிய புலிகள் அமைப்பினர் நிறுவன தலைவருமான மன்சூர் அலிகான் பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

1999ல் புதிய தமிழகம் சார்பில் கட்டை வண்டி சின்னத்தில் போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் பெற்றேன். முதன் முதலில் களம் இறங்கிய தினகரன் ஜெயலலிதாவின் பெயரால் வெற்றி பெற்றார். ஆனால் ஜெயலலிதாவை எப்படி ஒழித்தார்கள் எவ்வளவு கொடூரம் செய்தார்கள் என்று நாடறியும். நான் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரித்து வழக்கு போட்டு எல்லா ஆவணங்களும் வைத்திருக்கிறேன். அவர்கள் குடும்பம் எத்தனை லட்சம் கோடி அடித்து உலையில் போட்டார்கள். எப்படி ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு நயவஞ்சகம் செய்த மக்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் துரோகம் இழைத்தனர்.

ஆலமரமான அன்பின் ஆண்டாளான ‛‛ஜெயலலிதாவை வேரடி மண்ணோடி நாடகமாடி ஆளுநர் உள்பட யாரையும் பார்க்க விடாது மாய்த்த கொடூரத்தை எடுத்துச் சொல்லி மக்களோடு மக்களாக நின்று 1999ல் நான் தோற்ற அதே பெரியகுளம் தேனி மண்ணில் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன். இது சத்தியம். எந்த ஆளான கட்சியுடன் கூட்டணி வைத்து வந்தாலும் சரி. இந்தா வருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.