மறைந்த பவதாரிணியின் உடலை தேனியில் அடக்கம் செய்ய ஏற்பாடு!

மறைந்த பின்னணி பாடகர் பவதாரிணியின் உடல் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பங்களாவில் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட உள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜவின் மகள் பவதாரிணி(47) பின்னணி பாடகியான இவர் 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘அழகி’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’ உள்ளிட்ட பல படங்களுக்கும் பாடல் பாடியுள்ளார். சபரிராஜ் என்பவரை மணமுடித்தார்.

2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ என்ற திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடல் பாடியதற்காக பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்தது. சில மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி இலங்கையில் காலமானார். விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது. இதையடுத்து இன்று இரவு சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச்செல்லப்படும் அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப்பில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

லோயர்கேம்ப் குருவனூத்து பாலம் அருகே இளையராஜாவுக்கு 2.5 ஏக்கர் பரப்பளவில் பங்களா உள்ளது. இங்கு இளையராஜா தனது குடும்பத்தினருடன் தங்குவதற்கான அறைகள், தியான மண்டபம் உள்ளிட்டவை உள்ளன. இந்த வளாகத்தில் இளையராஜாவின் அம்மா சின்னத்தாய், மனைவி ஜீவா ஆகியோரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பவதாரணியின் உடலும் இங்கு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் திரைப்படத்துறையினரின் அஞ்சலிக்குப் பிறகு பவதாரிணியின் உடல் இங்கு கொண்டு வரப்பட உள்ளது.

இதுகுறித்து திரையுலகினர் கூறுகையில், “இளையராஜாவுக்கு சொந்த ஊர் தேனிமாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் ஆகும். இருப்பினும் தமிழக எல்லையான கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் அவருக்குச் சொந்தமான பங்களா உள்ளது. தீபாவளி, தாயார் மற்றும் மனைவி நினைவுநாளில் இங்கு குடும்பத்தினருடன் வருவார். பவதாரிணியின் உடலும் இங்கு அடக்கம் செய்யப்பட உள்ளது” என்றனர்.

இந்நிலையில் மகள் பவதாரிணி குறித்து இளையராஜா தனது எக்ஸ் தளத்தில் உருக்கமானப் பதிவு ஒன்றைப் போட்டு, பவதாரிணி சிறுமியாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், ‘அன்பு மகளே’ எனப் பதிவிட்டு, பிளாக் அண்ட் வொயிட்டில் பவதாரிணி சிறுமியாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு இருக்கும் இளையராஜா ஏதோ ஒரு புகைப்படத்தைக் காட்ட, அதை சிறுமியாக இருக்கும் பவதாரிணி உன்னிப்பாகப் பார்த்துச் சிரிக்கிறாள்.

பவதாரிணியின் உயிரிழப்புக்கு விஷால் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அன்புள்ள பவதா (பவதாரிணி). இதை ஜீரணிக்க முடியாமல் கனத்த இதயத்துடன் நான் எழுதுகிறேன். இனி நீ எங்களுடன் இருக்கப்போவதில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன். இளையராஜாவின் மகளாகவோ, யுவனின் சகோதரியாகவோ, வாசுகியின் உறவினராகவே உன்னை நான் அறிந்ததைவிடவும்; உடன் பிறந்த சகோதரியாகவே நினைக்கிறேன். அப்படித்தான் நான் உன்னை மிஸ் செய்கிறேன். ஒரு நல்ல உள்ளம் எங்களை விட்டு பிரிந்து செல்கிறது. கடந்த சில வாரங்களாகவே நான் விரும்பும் நபர்களை ஏன் இழக்கிறேன் என்று தெரியவில்லை. கண்டிப்பாக நீ நினைவுகூரப்பட்டுக்கொண்டே இருப்பாய். உனது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உன் இழப்பை சமாளிக்கும் சக்தி அவர்களுக்கு கிடைக்கட்டும்” என்று கூறியுள்ளார்.