சமீபத்தில் நான் கூறிய காக்கா கழுகு கதையை வேறு மாதிரி மாற்றி விட்டார்கள் என ரஜினிகாந்த் கூறினார்.
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள புதிய படம் ‘லால் சலாம்’. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால், கே.எஸ்.ரவிக்குமார், ஜீவிதா உள்ளிட்ட பலா் நடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. ‘லால் சலாம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் நேற்று இரவு நடந்தது.
இந்த விழாவில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், நெல்சன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
லால் என்றால் சிவப்பு. சிவப்பு நிறத்துக்கு நிறைய அடையாளங்கள் இருக்கு. அதை கம்யூனிஸ்ட் பயன்படுத்துவாங்க. வன்முறைக்கும் பயன்படுத்துவாங்க. புரட்சிக்கும் பயன்படுத்துவாங்க. ஐஸ்வர்யா புரட்சிக்காக தேர்ந்தெடுத்துருக்காங்க. கதை சொல்லும்போதே, இந்த கதைக்கு தேசிய விருது கிடைக்கும் என என் மகள் சொன்னார். அதுக்கு பிறகு விருதுக்காக நான் கேட்கமாட்டேன்னு சொல்லிட்டேன். அதன் பிறகு இது உண்மை கதை என்று சொன்னாங்க. அப்புறம் அந்த கதையை கேட்டேன். ஓகே சொன்னேன்.
`ரஜினிகாந்தே இந்த படத்தை தயாரிக்கலாம். அவர்கிட்ட இல்லாத பணமா?, கோடி கோடியா வச்சுருப்பார்’னு நிறைய பேர் பேசிகிட்டாங்க. ‘பாபா’ படத்துக்கு பிறகு நமக்கு ராசியில்லன்னு நிறுத்திட்டேன். நான் ஐஸ்வர்யாகிட்ட, நானே அந்த கதாபாத்திரம் பண்றேன்னு சொன்னேன். நம்ம வாழ்க்கையில நண்பர்கள் ரொம்ப முக்கியம். நண்பனுக்கும், எதிரிக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. எதிரி உள்ள ஒன்னு வச்சுருப்பான். அவன் பெரிய எதிரி ஆகிடுவான்.
எனக்கு ஒரு நண்பர் இருக்கார். எனக்கு ‘ஜெயிலர்’ படம் ஹிட் ஆன சமயத்துல, அந்த நண்பரிடம் படம் எப்படி இருக்கு என்று கேட்டேன். 30 சதவீதம் சந்தோஷம். 70 சதவீதம் சந்தோஷம் இல்லனு சொன்னார். மூன்று முடிச்சுல இருந்து இப்போ ஜெயிலர் வரைக்கும் எந்த படம் ஹிட்டானாலும் உனக்கு நேரம் நல்லா இருக்குனுதான் சொல்வார். அதுக்கு பிறகு உனக்கு மேடையில பேசுறதுக்கு யார் இதெல்லாம் எழுதி தர்றாங்கனு கேட்டாரு. மத நல்லிணக்கம் பத்தி இந்த படம் முக்கியமாக பேசியிருக்கு. மனுஷங்க சந்தோசமாக இருக்கனுன்னுதான் மதம் உருவாச்சு. இப்போ நான்தான் பெருசு, நீதான் பெருசுனு பேசிக்கறாங்க. எந்த மதத்துல உண்மை, நியாயம் இருக்கோ. அதுதான் சரியாக இருக்கும்.
சமீபத்தில் நான் கூறிய காக்கா கழுகு கதையை வேறு மாதிரி மாற்றி விட்டார்கள். எனக்கும், விஜய்க்கும் ஏதோ போட்டி என்பது போல பேசுவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நடிகர் விஜய் என் கண்ணுக்கு முன்பு வளர்ந்த பையன். சின்ன வயதிலிருந்தே அவரை பார்த்து வருகிறேன். ‘தர்மத்தின் தலைவன்’ படப்பிடிப்பின்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்னிடம் வந்து, ‘என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. படித்துவிட்டு நடிக்க வரட்டும். நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள்’ என்றார். அப்போது நான் விஜய்யிடம் ‘உங்களால் முடியுமா?’ என்று கேட்டேன், முடியும் என்றார். அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்து உழைப்பால் உயர்ந்து உள்ளார். தற்போது நன்றாக நடித்து வருகிறார். தற்போது அரசியலுக்கு வரும் முயற்சியில் உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
தற்போது விஜய்க்கும், எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது. எனக்கு போட்டி நான் தான் என விஜய்யே கூறியுள்ளார். என் படத்துக்கு நான் தான் போட்டி என நானே கூறியிருக்கிறேன். விஜய்யை போட்டியாக நான் நினைத்தால் அது எனக்கு மரியாதையாகவும், கவுரவமாகவும் இருக்காது. அதேபோல என்னை அவர் போட்டியாக நினைத்தால், அது அவருக்கும் மரியாதையாக இருக்காது. தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள் காக்கா, கழுகு கதையை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இது என் அன்பான வேண்டுகோள். இவ்வாறு அவர் பேசினார்.