28.9% குழந்தைகள் பாலியல் தொல்லைகளை அனுபவிக்கின்றனர்: யுவன் சங்கர் ராஜா

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லபட்ட சம்பவம் குறித்து இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யுவன்சங்கர் ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது பரவலான, பேரழிவு தரும் பிரச்சினை. 18 வயது நிறைவடைவதற்கு முன்னதாக 4ல் ஒரு குழந்தை பாலியல் தொல்லைக்கு பலியாகிறது. 6ல் ஒரு ஆண் குழந்தையும் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிறது. அதிர்ச்சியூட்டும் வகையில் 28.9% குழந்தைகள் ஏதோ ஒரு வகையில் பாலியல் தொல்லைகளை அனுபவிக்கின்றனர். குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் பற்றி சொல்லிக் கொடுப்பது மிகவும் முக்கியம்.

மேலும், நம்மைச் சுற்றியுள்ளவர்களை பாதுகாக்க, குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு நற்குணங்களை சொல்லி வளர்ப்பது அவசியம். புதுச்சேரியில் நடந்த இந்த கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதன் மூலம், பல தீமைகளை நாம் எதிர்கொள்கிறோம் என்பது தெளிவாகிறது. பாதுகாக்கப்பட்ட சமுதாயமாகவும், ஒன்றுபட்ட நாடாகவும் வளர்வோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.