மஞ்சுமெல் பாய்ஸ் இங்கே ஓடுது, ஆனால், என்னுடைய படத்தை வாங்க யாரும் தயாராக இல்லை: சமுத்திரகனி

தமிழ் சினிமாவில் புதிதாக வெளியாகும் படங்களை ரசிகர்கள் கொண்டாடாமல் மறு வெளியீடு செய்யப்படும் படங்களைப் பார்த்து ரசிப்பது என்ன மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை என நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. ஒரு நடிப்பில் இந்த வாரம் யாவரும் வல்லவரே எனும் படம் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தின் புரமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சமுத்திரக்கனி மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்க்க ரசிகர்கள் கூடுகின்றனர். ஆனால், தனது படத்தை வாங்குவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கூட முன்வருவதில்லை என தனது கோபத்தை கொட்டித் தீர்த்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் தமிழ் சினிமா படங்களை நிராகரித்து ஒரு ரசிகர்கள், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் மலையாள படங்களை திடீரென கொண்டாடுவது ஏன் என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமுத்திரக்கனி. அந்த படத்தில் வெங்கட் பிரபு மற்றும் எஸ்.பி.பி சரண் ஹீரோவாக நடித்திருந்தனர். அந்தப் படத்தை தொடர்ந்து விஜயகாந்தை வைத்து நிறைந்த மனசு, சசிகுமாரை வைத்து நாடோடிகள், போராளி, ஜெயம் ரவி வைத்து நிமிர்ந்து நில் மேலும், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, வினோதய சித்தம் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். பார்த்தாலே பரவசம் படத்தில் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்டாக நடித்திருந்த சமுத்திரகனி சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து நல்ல நடிகராக மாறினார். அந்தப் படத்தை தொடர்ந்து ஈசன், சாட்டை நீர்ப்பறவை, வேலையில்லா பட்டதாரி, ரஜினிமுருகன், விசாரணை, வேலையில்லா பட்டதாரி 2, காலா, வடசென்னை, சங்கத்தலைவன், ஏலே, ஆர்ஆர்ஆர், டான், துணிவு, தலைக்கூத்தல், சைரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களிலும் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.

மார்ச் 15-ஆம் தேதி நாளை சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள யாவரும் வள்ளுவரை திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தை ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். அந்த படத்தின் புரமோஷனுக்கான பேட்டியில் சமீப காலமாக திரைப்படங்களை ஏன் இயக்குவதில்லை என்கிற கேள்விக்கு பதில் அளிக்கும் போது சற்றே சூடாகி விட்டார் சமுத்திரகனி. அப்பா படத்தை எடுத்துவிட்டு அதை ரிலீஸ் செய்யத்தான் போராடியது தனக்குத்தான் தெரியும் என்றும், தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்களை பார்க்க ரசிகர்கள் தயாராக உள்ளார்களோ இல்லையோ தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் முதலில் தயாராக இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது. மலையாளத்தில் வெளியான சிறு பட்ஜெட் படமான மஞ்சுமெல் பாய்ஸ் இங்கே ஓடுது. ஆனால், என்னுடைய படத்தை கூட வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை. அந்த காரணத்தினால் தான் இயக்குவதை விட்டுவிட்டு யார் நடிக்க கூப்பிடுகின்றனரோ போய் அந்த படத்தில் நடித்துவிட்டு வருகிறேன் எனக் கூறியுள்ளார்.