பெண்கள் குடிக்கக் கூடாது என்று எல்லாம் பேசக் கூடாது: விஜய் ஆண்டனி!

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ரோமியோ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகப் போகிறது. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முதலிரவில் சரக்கு பாட்டிலுடன் மிருணாளினி ரவி இருக்கும் போஸ்டர் வெளியானது. அதுதொடர்பான கேள்வியை நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்கள் எழுப்ப விஜய் ஆண்டனி அளித்த பதில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

சமீபத்தில் ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “வெத்தல.. வெத்தல பெரிய வெத்தல” என டபுள் மீனிங்கில் பாடல் ஒன்று வெளியானது. பெண்களுக்கு எதிரான கருத்துக்களுடன் வெளியான சூப் சாங் பாடல் போன்றே அந்த பாடல் அமைந்திருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், அந்த பாடல் குறித்த கேள்விக்கும் வில்லங்கமாகவே விஜய் ஆண்டனி பதில் அளித்துள்ளார்.

விஜய் ஆண்டனி கொலை, ரத்தம், கொலைகாரன் என கொடூரமான டைட்டில்களில் நடித்து வந்த நிலையில், ரொம்ப வருஷத்துக்குப் பிறகு ஜாலி மூடில் ரோமியோ என்கிற டைட்டிலில் நடித்துள்ளார். வரும் சம்மருக்கு இந்த படம் வெளியாக போகிறது. இதில், அவருக்கு ஜோடியாக கோப்ரா, எனிமி, சூப்பர் டீலக்ஸ், எம்ஜிஆர் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்த மிருணாளினி ரவி நடித்துள்ளார்.

முதலிரவில் ஹீரோயின் சரக்கடிப்பது போன்ற போஸ்டர் வெளியிடலாமா? சரக்கடிப்பதை ஆதரிக்கிறீங்களா? என சில பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, அய்யோ நான் சரக்கடிக்கலீங்க, இவங்க தான் என ஹீரோயினை கோர்த்து விட்டு, பத்திரிகையாளர் கேட்பது போலவே, “ஏன் குடிச்சீங்க?” என விஜய் ஆண்டனி மிருணாளினியை மிரட்டும் தொனியில் கேட்டார். அவர் தனக்கு ஒன்றுமே தெரியாதது போலவே பதில் அளித்து எஸ்கேப் ஆகி விட்டார்.

உடனடியாக விஜய் ஆண்டனி ஆண்கள் மட்டும் தான் குடிக்க வேண்டுமா? மது குடிப்பது பொதுவானது. ஆண்கள் ஒரு விஷயத்தை செய்தால் அதை பெண்களும் தாராளமாக செய்யலாம். பெண்கள் குடிக்கக் கூடாது என்று எல்லாம் பேசக் கூடாது என பத்திரிகையாளரை மடக்கிய விஜய் ஆண்டனி, ஜீசஸ் குடிக்கலையா? அந்த காலத்திலேயே திராட்சை ரசம், சோம பாணம் என மது இருந்து தானே வந்தது என்று பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

விஜய் ஆண்டனி தனது படத்தின் புரமோஷனுக்காக ஏசுவை இழுத்து ஏன் பேச வேண்டும் என்றும் அவரது படத்தை பற்றிய கேள்விக்கு அவர் நேரடியாக பதில் அளிக்காமல் இப்படி ஏசுவை இழிவுப்படுத்தி பேசுவது தவறான ஒன்று என்றும் இதற்கு அவர் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என கிறிஸ்துவர்கள் கமெண்ட் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.