‘கா’ படத்துக்கு ஆண்ட்ரியாதான் வேண்டும் என்று இயக்குனர் அடம்பிடித்தார் என்று நடிகை ஆண்ட்ரியா கூறினார்.
பாடகியாக திரையுலகில் அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிஸியான நடிகையாக அவர் இருந்தாலும் பாடுவதை அவர் நிறுத்தவில்லை. சமீபத்தில்கூட புதுச்சேரியில் ஒரு கான்செர்ட்டை நடத்தினார். அதற்கு ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. ஒருபக்கம் கான்செர்ட், பாடல் என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா மறுபக்கம் நடிப்பையும் விடவில்லை. தற்போது அவர் கா என்னும் படத்தில் நடித்திருக்கிறார். நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா ஆரம்பத்தில் பாடகியாக அறியப்பட்டவர். அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா, வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற கற்க கற்க, ஆதவன் படத்தில் இடம்பெற்ற ஏனோ ஏனோ உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர். பாடகியாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் கலக்கினார் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவின் தனித்துவமான குரலுக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடகியாக பிரபலமான ஆண்ட்ரியா கண்டநாள் முதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு ஓரளவு பேசப்பட்டது. இதனையடுத்து இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்தார் ஆண்ட்ரியா. இந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஈர்த்தது. இதனையடுத்து சில வருடங்கள் நடிக்காமல் பாடுவதில் கவனம் செலுத்திய ஆண்ட்ரியா செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார். வரலாற்று ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தை ஏற்ற ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவனில் சிறந்த நடிப்பை வழங்கினார். அந்தப் படத்தில் நடித்ததோடு மட்டுமின்றி பாடல் பாடவும் செய்தார். ஆயிரத்தில் ஒருவனில் நடித்த பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி அஜித் நடித்த மங்காத்தா, கமல் நடித்த விஸ்வருபம், உத்தம வில்லன், ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை, சுந்தர் சி நடித்த அரண்மனை என ஏராளமான தமிழ் படங்களிலும், அன்னையும் ரசூலும் உள்ளிட்ட மலையாள படத்திலும் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர ஆரம்பித்திருக்கிறார் ஆண்ட்ரியா.
ஆண்ட்ரியாவின் கரியரிலேயே முக்கியமான படம் வடசென்னை. அமீரின் மனைவியாக சந்திரா என்ற கதாபாத்திரத்தில்; தனது கணவரை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக காத்திருப்பதும், கிடைக்கும் சந்தர்ப்பத்தையெல்லாம் தனக்காக மாற்றிக்கொள்வதும் என ஆண்ட்ரியாவின் நடிப்பு வடசென்னை படத்தின் ப்ளஸ்களில் ஒன்றாகும். இப்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் அவர் தற்போது கா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நாஞ்சில் என்பவர் இயக்கியிருக்கிறார். இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது பேசிய ஆண்ட்ரியா, “படத்தின் இயக்குநர் நாஞ்சிலுக்கு எனது பாராட்டுக்கள். உயிரை கொடுத்து எடுத்திருக்கிறார். இத்திரைப்படம் குழந்தை மாதிரி. தயாரிப்பாளர் என்ற அப்பாவும், இயக்குநர் என்ற அம்மாவும் ஒத்துழைக்காமல் இருந்திருந்தால் இந்தக் குழந்தையை வளர்த்திருக்க முடியாது. சில இயக்குநர்கள் தங்கள் படங்களுக்கு சில நடிகைகளை முதலில் தேர்வு செய்வார்கள். பிறகு அந்த நடிகை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அந்த நடிகைக்கு பதிலாக இன்னொரு நடிகையை நடிக்க வைத்துவிடுவார்கள். ஆனால் நாஞ்சில் அப்படி இல்லை. இந்தப் படத்துக்கு ஆண்ட்ரியாதான் வேண்டும் என்று அடம்பிடித்தார்” என்றார்.