கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம். கேரளாவை விட தமிழ்நாட்டில் தான் இப்படம் சக்கை போடு போட்டது. வசூலிலும் வேறலெவல் சாதனை படைத்து வருகிறது. அனைவரும் மஞ்ஞும்மல் பாய்ஸை கொண்டாடி தீர்த்து வந்த நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் படத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி சிதம்பரம் எஸ் பொதுவல் என்பவர் இயக்கத்தில் சௌபின் ஷாகீர், ஸ்ரீநாத் பாஸி, கணபதி, மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருந்தது ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. இப்படத்தில் கமலின் குணா படத்தில் வரும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை முக்கியமான சீன்களில் பயன்படுத்தி இருந்தனர். இது ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தினை தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடி தீர்க்க முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இந்நிலையில் அனைவரும் இப்படத்தை கொண்டாடி தீர்த்து வந்த நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன், மஞ்ஞும்மல் பாய்ஸை கடுமையாக விமர்சித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம் என்ற தலைப்பில் தனது சமூகவலைதள பக்கத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் குறித்து அவர் கடும் விமர்சனம் செய்திருந்தார். மஞ்சுமெல் பாய்ஸ் தனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது என குறிப்பிட்ட அவர், படத்தில் உள்ள அதே மனநிலையில்தான் தென்னகம் முழுக்க சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் உள்ளது என கடுமையாக விமர்சித்திருந்தார். ஒரு தமிழ் கதைநாயகன் எந்தப்பொறுக்கிகளிடமிருந்து சாமானியர்களை காப்பாற்றுவாரோ அந்த பொறுக்கிதான் இன்றைய மலையாள சினிமாவின் கதைநாயகன்.
மலையாளக் கதாநாயக நடிகர்கள்கூட போதை மருந்து வழக்குகளில் சிக்கிக்கொள்வது அடிக்கடி செய்திகளில் வருகிறது. அவர்கள்தான் மலையாளச் சமூகத்தையே போதைவெறியை இயல்பாக எடுத்துக்கொள்ளப் பழக்கப்படுத்துகிறார்கள். இவர்கள் எடுக்கும் போதைவெறி சினிமாக்களை தமிழகத்தில் கொண்டாடுபவர்கள் அசடுகள் அல்லது அயோக்கியர்கள் என்றே வகைப்படுத்துவேன்.
இந்தக் கும்பல் சுற்றுலாத் தலங்களைச் சீரழிப்பது ஒரு பக்கம். ஆனால் அடர்காடுகளுக்குள் அத்து மீறுகிறார்கள். அதற்காக ஊடுவழிகளை எல்லாம் தேர்வு செய்கிறார்கள். எந்த சட்டத்தையும் பொருட்படுத்துவதில்லை. எந்த எச்சரிக்கைகளையும் பேணுவதில்லை. இந்தப் பொறுக்கிகளை எளியவர்களின் கொண்டாட்டம் என்று காட்டி நியாயப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களை உன்னதமாக்குகிறது மஞ்சுமெல் பாய்ஸ். அவர்களை தியாகிகள், நட்பின் இலக்கணங்கள் என்று சொல்ல முயல்கிறது. எந்த பொறுக்கிக் கும்பலுக்கும் அவர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கும். குற்றவாளிக் கூட்டங்களுக்குள்ளேயே தியாகவுணர்வு இருக்கும். அதெல்லாம் உயர்ந்த உணர்வுகள் அல்ல. உண்மையிலேயே இப்படி நடந்து, அதில் ஒருவனுக்குத் தேசிய விருது அளிக்கப்பட்டிருப்பதாக படத்தின் இறுதியில் செய்தி காட்டப்படுகிறது. சட்டப்படிச் சிறையில் தள்ளப்பட வேண்டியவன் அவன் என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் பட விழா ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகனை கண்டித்து பேசியுள்ளார். ‘கா’ திரைப்பட இசைவெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட கே.பாக்கியராஜ் கூறியதாவது:-
மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கேரளாவில் ஓடியதைவிட நமது ஊரில் தான் மிகப்பெரிய வசூலாகியுள்ளது. நமது ஊர் எழுத்தாளர் (ஜெயமோகன்) ஒருவர் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை மிகவும் கீழே இறங்கி விமர்சனம் செய்தது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஏனென்றால் அவர் மிகவும் நல்ல பெயர்வாங்கிய எழுத்தாளர்.
படத்தை மட்டும் விமர்சித்து அவர் வார்த்தை விட்டால் பரவாயில்லை, வேறு மாதிரியான வார்த்தைகளை விட்டுவிட்டார். பொதுவாக கேரள மக்களை விமர்சித்து வார்த்தைகளை விட்டது அது தமிழனின் நாகரீகம் அல்ல, நமது பண்பாடும் கிடையாது. நாம் அனைவரையும் பாராட்டிதான் கூறுவோமே தவிர யாரையும் இவ்வாறு இறங்கி விமர்சிப்பதில்லை. எழுத்தாளர் இப்படி விமர்சனம் செய்தார் என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. சினிமாவில் நீங்கள் என்னவேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். தனிப்பட்ட முறையில் கேரள மக்களை அவ்வாறு பேசியதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் யாருமே கண்டிக்கவில்லையே என்று கேரள மக்கள் நினைக்கக்கூடாது. தமிழ்நாட்டிலும் இவ்வாறான கருத்துக்களை கண்டிக்க ஆட்கள் உள்ளனர். எழுத்தாளர் கேரள மக்களை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எழுத்தாளரின் கருத்து எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாடு சார்பில் யாரும் பேசவில்லையே என கேரள மக்கள் நினைக்கக்கூடாது என்பதற்காகத்தான் நான் இப்போது இவ்வாறு பேசினேன். படத்தை பற்றி விமர்சிக்கலாம், ஆனால் தனிப்பட்ட முறையில் விமர்சித்தது மிகவும் வருத்தமாக இருந்தது. நானும் ஒரு எழுத்தாளர் என்ற முறையில் ஜெயமோகன் அவ்வாறு பேசியது எனக்கு வருத்தமாக உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.