நோட்டாவுக்கு வாக்களிப்பது தேவையற்றது: விஜய் ஆண்டனி!

95 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெற அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் என திரைப்பட நடிகர் விஜய் ஆண்டனி வலியுறுத்தி உள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் விஜய் ஆண்டனி கூறியதாவது:-

மக்கள் கையில் உள்ள ஒரே ஆயுதம் வாக்குதான். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்த வேண்டும். என்னைப் பொறுத்தவரை நோட்டாவுக்கு வாக்களிப்பது தேவையில்லாதது. எல்லோருமே நோட்டாவுக்கு வாக்களித்துவிட்டால், யாரை நாம் தேர்ந்தெடுப்பது? தேர்தலில் போட்டியிடுபவர்களில் யாராவது ஒருவர் சிறந்தவராக இருப்பார். அவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

வழக்கமாக 65 முதல் 67 சதவீதம்தான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இது மாற்றப்பட வேண்டும். குறைந்தபட்சம் 90 முதல் 95 சதவீதம் வரை வாக்களிக்க மக்கள் முன்வர வேண்டும். வாக்களிக்காமல் இருந்து விட்டு அதன் பிறகு வருத்தப்படுவதில் பயன் இல்லை. வாக்களிப்பது என்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் முக்கியம். எனவே, அனைவரும் வாக்களிக்க வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.