‘ரோமியோ’வை ‘அன்பே சிவம்’ ஆக்கிடாதீங்க: விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ரோமியோ’ படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்த நிலையில், ‘ரோமியோ’வை ‘அன்பே சிவம்’ ஆக்கிடாதீங்க என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே, ரோமியோ ஒரு நல்ல படம். போய் பாருங்க புரியும். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க” என தெரிவித்துள்ளார்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஏப்.11-ம் தேதி விஜய் ஆண்டனி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘ரோமியோ’. மிருணாளினி ரவி நாயகியாக நடித்துள்ள இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்துள்ளார். விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார்.

பரத் தனசேகர் இசையமைத்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் விஜய் ஆண்டனி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுந்தர்.சி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் ‘அன்பே சிவம்’. அந்தப் படம் திரையரங்குகளில் வெளியானபோது வரவேற்பைப் பெறாமல் பெரிதாக வசூலை ஈட்டவில்லை. ஆனால், பின்னாளில் தொடர்ந்து அந்தப் படம் மேன்மையுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை அர்த்தப்படுத்தியே ‘ரோமியோ’ குறித்து விஜய் ஆண்டனி கருத்துப் பகிர்ந்துள்ளார்.