ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி உள்ள ரத்னம் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்துக்கு கடைசி நேரத்தில் ரிலீஸ் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் படத்திற்கு எதிராக கட்ட பஞ்சாயத்து நடப்பதாகவும் நடிகர் விஷால் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ரத்னம் படம் நாளை வெளியாகும் நிலையில், பல திரையரங்கில் இன்னமும் டிக்கெட் புக்கிங் தொடங்கவில்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், கடைசி நேரத்தில் படத்தை வெளியிட விடாமல் சதி செய்வதாக விஷாலே வெளியிட்டுள்ள ஆடியோ பகீர் கிளப்புகிறது. நடிகர் விஷால் 2026ம் ஆண்டு அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் தன்னுடைய மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸுக்கு பிரச்சனை செய்ததாகவும் சமீபத்தில் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடைசி நேரத்தில் ரத்னம் படத்தை வெளியிட விடாமல் சிலர் தடுக்கின்றனர் என்றும் இதுக்கு பேரு கட்ட பஞ்சாயத்து. இதன் விளைவுகளை நிச்சயம் அவர்கள் சந்திப்பார்கள் என நடிகர் விஷால் தற்போது ஆடியோ ஒன்றை வெளியிட்டு தனது குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து ரத்னம் படத்தில் விஷால் நடித்துள்ளார். அந்த படம் நாளை ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது. திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியாவில் தான் நடித்துள்ள ரத்னம் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கிறாங்க என்றும் இதுக்கு பேர் கட்ட பஞ்சாயத்து என நடிகர் விஷால் அதிரடியாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ரத்தமும் வியர்வையும் சிந்தி இந்த படத்தில் நடிச்சிருக்கேன். என்னுடைய நண்பர்கள் இந்த படத்தை வாங்கி வெளியிடுகின்றனர். தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் இப்படியெல்லாம் கடைசி நேரத்தில் ஒரு கடிதத்தை கொடுத்து விட்டார்கள் என படத்திற்கு தடை விதிப்பது சரியான நடைமுறை அல்ல என விஷால் எச்சரித்துள்ளார்.
சம்பந்தமில்லாத நபர் டிடி ஏரியா என சொல்லப்படும் திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியா திரையரங்க உரிமையாளர் சங்கத்தில் கடிதம் ஒன்றை கடைசி நேரத்தில் கொடுத்தால் படத்தை முடக்குவீங்களா? காலையில் இருந்து உங்களை தொடர்பு கொள்ள போன் செய்கிறேன். நீங்க வெயிட்டிங்கிலேயே வைத்து வருகிறீர்கள். பண்ணுங்க, எவ்ளோ பண்ண முடியுமோ பண்ணுங்க, விஷாலுக்கே இந்த நிலைமைன்னா மற்ற சாதாரண நடிகர்களுக்கு என்ன நிலை என தமிழ் சினிமா தெரிந்து கொள்ளட்டும் என பேசியுள்ளார்.