பேஸ்புக் மூலம் நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை: நடிகர் சிங்கம்புலி!

பேஸ்புக் பணமோசடியால் நடிகரும், இயக்குனருமான சிங்கம்புலி திடீரென்று தனது செல்போன் எண்ணை கூறி பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரும் கவனமாக இருக்கும்படி கூறியுள்ளார்.

தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களை நாம் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் தற்போது சமூக வலைதளங்களின் மோசடி என்பது அதிகரிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக பெரிய பெரிய தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகளின் பெயரில் மோசடிகள் என்பது அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் தான் பேஸ்புக் பணமோசடி தொடர்பாக இயக்குனரும், நடிகருமான சிங்கம்புலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் குமாரின் ‛ரெட்’, நடிகர் சூர்யாவின் ‛மாயாவி’ திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் சிங்கம்புலி. அதன்பிறகு பிதாமகன், ரேனிக்குண்டா உள்ளிட்ட திரைப்படங்களில் வசனகர்த்தாவாகவும் செயல்பட்டார். இதையடுத்து சிங்கம்புலி நடிகராக அவதாரம் எடுத்தார். மாயாண்டி குடும்பத்தார், மனம் கொத்திப்பறவை, தேசிங்கு ராஜா உள்பட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், காமெடி ரோலிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தான் சிங்கம்புலி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:-

அனைவருக்கும் வணக்கம். நான் இயக்குனர், நடிகர் சிங்கம் புலி பேசுகிறேன். 2 நாளாக போலியான பேஸ்புக் அக்கவுண்ட்டில் இருந்து எனக்கு உடல்நலம் சரியில்லாதது போலவும், நான் ஆஸ்பத்திரியில் இருப்பது மாதிரியும், நான் மருத்துவத்துக்காக பணம் கேட்பது போன்றும் சிலர் மெசேஜ் அனுப்பி ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். இதனால் இதுபோன்ற மெசேஜை யாரும் நம்ப வேண்டாம். எனக்கு சிங்கம் புலி ஆக்டர் என்ற ஒரு அக்கவுண்ட் மட்டும்தான் உள்ளது. எதாக இருந்தாலும் என்னுடைய நம்பர் 9940526263 தொடர்பு கொண்டு முழுவிபரத்தை கேட்டு கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். பேஸ்புகள் போலி அக்கவுண்ட்டை யாரும் நம்ப வேண்டாம். நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை. பணம் கேட்க வேண்டிய நிலையிலும் நான் இல்லை. இதனால் தயவு செய்து என் நண்பர்கள், உறவுகள், என் ரசிகர்கள், என் மீது பற்றுள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன். போலியான பேஸ்புக் அக்கவுண்ட்டில் இருந்து இந்த மோசமான உலகில் ஏமாற்றி பிழைக்கிறார்கள். இதற்கு நீங்கள் இடம் கொடுக்காதீர்கள். நன்றி.. நன்றி.. நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.