நடிகை ஸ்ரீதேவியை கவுரவப்படுத்திய மும்பை மாநகராட்சி!

ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாக மும்பை மாநகராட்சி, லோகண்ட்வாலா சந்திப்பு ஒன்றுக்கு ‘ஸ்ரீதேவி கபூர் சவுக்’ எனப் பெயரிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘கந்தன் கருணை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. பின்பு பல படங்களில் நடித்து கதாநாயகியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். 1970 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக இருந்த அவர், 1983-ல் இந்தியில் வெளியான ‘ஹிம்மத்வாலா’ படம் மூலம் அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து இந்தியில் நடித்து முன்னணி இடம் பிடித்த அவர், பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

2018-ல் துபாயில் இருந்தபோது ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்ற ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். குளியல் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாக மும்பை மாநகராட்சி, லோகண்ட்வாலா சந்திப்பு ஒன்றுக்கு ஸ்ரீதேவி கபூர் சவுக் எனப் பெயரிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவியை கவுரப்படுத்த வேண்டும் என்பதற்காக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் தான் ஸ்ரீதேவி வசித்து வந்தார். மேலும் அவரது இறுதி ஊர்வலம் இந்த வழியாகத்தான் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.