சாதிய ஏற்றத்தாழ்வுகள் இந்தியா முழுக்க நடந்து கொண்டுத்தான் இருக்கிறது: வெற்றிமாறன்!

நடிகர் ரஞ்சித்தின் நடிப்பில் உருவாகி உள்ள குழந்தை C/O கவுண்டம்பாளையம் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பிரவீன் காந்தி, சினிமாவில் சாதியைப் பற்றி பேசவே கூடாது. அதுதான் என்னுடைய கொள்கை. சினிமாவில் சாதியைப் பற்றி பேசுபவன் ஒதுக்கப்பட வேண்டியவன் என்று பேசி இருந்தார். இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளான நிலையில், இதற்கு வெற்றிமாறன் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் ரஞ்சித் கே.எஸ். ராஜ்குமார் இயக்கிய பொன்விலங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆர்.கே.செல்வமணி தயாரித்த இந்த படத்தில், ரகுமான், சிவரஞ்சனி மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், சேரனின் பாரதி கண்ணம்மா, மருமலர்ச்சி, தேசிய கீதம் மற்றும் புதுமைபித்தன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகராக இருந்த ரஞ்சித் 2003ம் ஆண்டு பீஷ்மர் படத்தை இயக்கினார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. படத்தின் தோல்வியைத் தொடர்ந்து, பணப்பற்றாக்குறையால் ரஞ்சித்தால் அடுத்த படத்தை இயக்காமல் இருந்த ரஞ்சித் தற்போது, குழந்தை C/O கவுண்டபாளையம் படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரவீன் காந்தி பேசுகையில், பா. ரஞ்சித், வெற்றிமாறன் போன்ற சில இயக்குநர்கள் சினிமாவில் வளர்ச்சி கண்ட பிறகு தான் தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது. சினிமாவில் சாதியைப் பற்றி பேசவே கூடாது. அதுதான் என்னுடைய கொள்கை. சினிமாவில் சாதியைப் பற்றி பேசுபவன் ஒதுக்கப்பட வேண்டியவன். கோவையில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற ஒன்று நடைபெற்றது. என்னுடைய சகோதரன், சகோதரி அங்கே சீர்கெட்டு கொண்டு இருக்கிறார்கள் என முதலில் குரல் கொடுத்தவர் ரஞ்சித். அதற்கு பிறகு தான் அது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்பட்டது. எதிர்காலத்தில் என்னுடைய சகோதரன் கெட்டுவிடக் கூடாது என கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்க நான் குரல் கொடுப்பேன் என குரல் கொடுத்தவர். நிச்சயம் ஒரு நல்ல படத்தை கொடுத்து இருப்பார் என்று பிரவீன் காந்தி பேசி இருந்தார்.

இது இணையத்தில் பேசுபொருளான நிலையில்,திருநெல்வேலியில் இயக்குநர் வெற்றிமாறனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த வெற்றிமாறன், “அவருடைய பேட்டியை நான் பார்க்கவில்லை, இதனால் எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரிவில்லை. இருந்தாலும், இந்தியாவில் சாதிய முறை ஒடுக்குமுறை இல்லைனு ஒருத்தர் சொன்னா, அல்லது சமூக ஏற்றத்தாழ்வு இல்லை என்று சொல்கிறார்கள் என்றால், அவர்கள் எங்கே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று எனக்கு தெரிவில்லை. சாதிய வன்முறைகள், ஏற்றத்தாழ்வுகள் இந்தியா முழுக்க நடந்து கொண்டுத்தான் இருக்கிறது. அதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்து கொண்டுத்தான் இருக்கிறது” என்றார்.

இதைத் தொடர்ந்து விடுதலை 2 படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த வெற்றிமாறன், விடுதலை 2 படப்பிடிப்பிடிப்புக்காகத்தான் இங்கே வந்தேன், இன்னும் 10 , 15நாட்கள் ஷூட்டிங் இருக்கு முடிந்தவுடன் படம் வெளியீடு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.