அல்லு அர்ஜுனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்த நிலையில் பாய்ந்தது வழக்கு!

ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவை சந்திக்க சென்ற நடிகர் அல்லு அர்ஜுனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்த நிலையில் தற்போது அவர் சிக்கலில் சிக்கி உள்ளார். மேலும் அல்லு அர்ஜுன் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். ஆந்திரா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் ஜுன் 11ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஆந்திராவில் சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் ஆகியவை ஒன்றாக நடைபெற உள்ளது. நாளை ஒரேகட்டமாக ஆந்திராவில் லோக்சபா, சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஆந்திராவில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. மேலும் ஆந்திராவை பொறுத்தவரை மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 88 இடங்களில் வெல்ல வேண்டும். ஆந்திராவில் மும்முனை போட்டி உள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. மாறாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. ஆந்திராவில் நேற்று பிரசாரம் முடிவடைந்தது.

இதற்கிடையே நேற்று தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நாந்தியால் சட்டசபை தொகுதி சிட்டிங் எம்எல்ஏ ஷில்பா ரவி ரெட்டியை சந்தித்தார். இவர் மீண்டும் அந்த தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். நண்பர் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க சென்றார். இந்த வேளையில் அல்லு அர்ஜுனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து வீட்டு பால்கனியில் நின்றபடி அல்லு அர்ஜுன் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பா ரவி ரெட்டியின் கையை உயர்த்தி காண்பித்தார். ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் அங்கு கூடியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் தான் அல்லு அர்ஜுன் தேர்தல் விதிகளை மீறியதாக புகார்கள் கிளம்பின. இதுதொடர்பான புகாரில் ஒரே நேரத்தில் எந்த அனுமதியும் இன்றி ஏராளமானவர்களை கூட்டம் சேர்த்ததாக கூறி நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஷில்பா ரவி ரெட்டி ஆகியோர் மீது தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.