விஸ்வக் சென், அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு திரைப்படமான கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் இன்று வெளியாகிறது. அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நந்தமுரி பாலகிருஷ்ணா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஞ்சலி. அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், சிங்கம் 2, கலகலப்பு, சகலகலா வல்லவன், இறைவி, சிந்துபாத், நாடோடிகள் 2, பாவ கதைகள் உள்ளிட்ட பல படங்களில் தமிழில் நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அஞ்சலி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாவதற்கு முன்னதாக கடந்த 2006-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான போட்டோ படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 2016 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணன் நடிப்பில் வெளியான டிக்டேட்டர் படத்தில் அவருடன் இணைந்து அஞ்சலி நடித்துள்ளார். பல ஆண்டுகளாக பாலகிருஷ்ணாவுடன் நல்ல நட்புறவில் இருந்து வரும் அஞ்சலியின் புதிய படமான கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு பாலகிருஷ்ணா கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
பாலகிருஷ்ணா அதிரடிக்கு சொந்தமானவர் என்பது தெலுங்கு திரை உலகில் பலருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், அவரது நடவடிக்கைகளை பார்த்த நெட்டிசன்கள் அஞ்சலியை பிடித்து அப்படி தள்ளிவிட்டது அதுவும் பொது மேடையில் அப்படி செய்தது மிகப்பெரிய தவறு என கடந்த 2 நாட்களாக பாலகிருஷ்ணாவை போட்டு பொளந்து வருகின்றனர். பாலிவுட் இயக்குநர் ஹன்சல் மேத்தா அஞ்சலியை பாலகிருஷ்ணன் தள்ளிவிடும் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் யாரு இந்த கேவலமானவன்? என்றே ட்வீட் போட்டு சர்ச்சையை கிளப்பி விட்டார். ஓவர் நைட்டில் இந்தியா முழுவதும் பாலகிருஷ்ணனுக்கு எதிராக ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்தன.
பாலகிருஷ்ணன் செயல் சாதாரணமானதுதான் அவர் தவறான நோக்கத்துடன் அஞ்சலியை பிடித்து தள்ளவில்லை என்றும் அந்த விவரம் தொடர்பாக அஞ்சலி எந்த ஒரு ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. தேவையில்லாமல் இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்க வேண்டாம் என கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் ஹீரோ விஸ்வக் சென் மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட பிரபலங்கள் பாலகிருஷ்ணாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இப்படி ஒரு சர்ச்சை கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வரும் நிலையில் அதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக நடிகை அஞ்சலி நேற்று நள்ளிரவில் தனது எக்ஸ் பக்கத்தில் பாலகிருஷ்ணாவுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒன்றை போட்டுள்ளார். பாலகிருஷ்ணா காருவும் தானும் பல ஆண்டுகளாக நண்பர்களாக ஒருவரை ஒருவர் மதித்து வருகிறோம். கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்கு அவர் வந்து கலந்து கொண்டது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம். மேடையில் பகிர்ந்து கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன் என பதிவிட்டு பஞ்சாயத்தை முடித்து வைத்துள்ளார்.
நடிகை அஞ்சலிக்கு ஆதரவாக கடந்த இரண்டு நாட்களாக பல பெண்ணியவாதிகள் பொங்கி எழுந்த நிலையில் அனைவருக்கும் ஆப்படிக்கும் விதமாக அஞ்சலி இப்படி ஒரு ட்வீட்டைப் போட்டு போய் புள்ள குட்டிகளை படிக்க வைக்கிற வேலையை பாருங்க என விரட்டி அடித்துள்ளார் என பாலகிருஷ்ணா ரசிகர்கள் தற்போது அஞ்சலியின் ட்வீட்டை ஷேர் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே பாடகி சின்மயி தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்கிற ரீதியில் கருத்து தெரிவித்திருக்கும் அவர், ‘மக்களிடம் இதை பகிர்வதிலிருந்து நான் கவனிக்கும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று, அவர் (அஞ்சலி) சிரிப்பதை பாருங்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.