போயஸ் கார்டனில் உள்ள பங்களாவில் இருந்து வாடகைக்கு குடியிருந்தவரை காலி செய்ய மிரட்டியதாக நடிகர் தனுஷுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் நளினா ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் அஜய்குமார் லுனாவத் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தனது வீட்டுக்கு வந்த சிலர், இந்த வீட்டை நடிகர் தனுஷ் விலைக்கு வாங்கி விட்டதாகவும், எனவே உடனடியாக வீட்டை காலி செய்து தர வேண்டும் எனக்கூறி மிரட்டியதாக நடிகர் தனுஷூக்கு எதிராக அஜய்குமார் லுனாவத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், கடந்த 2024 ஜனவரி வரை வீட்டுக்கான வாடகை ஒப்பந்தம் அமலில் இருந்த நிலையில் உடனடியாக காலி செய்ய மறுத்ததால் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டனர். முறையாக வாடகை செலுத்தி வருகிறேன். எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென ஏராளமான நபர்கள் வந்து வீட்டைக் காலி செய்து கொடுக்கும்படி வற்புறுத்தியது சட்டவிரோதமானது. எனவே இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு நடிகர் தனுஷ் உள்ளிட்டோருக்கு தடை விதிக்க வேண்டும், என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ் காணொலி காட்சி மூலமாக விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். அப்போது நடிகர் தனுஷ் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டு விட்டது. கடந்த மே 31-ம் தேதியன்று அந்த வீட்டின் சாவி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்துள்ளார்.