அஞ்சாமை படத்தை தடை செய்ய வேண்டும் என புகார்!

விதார்த், வாணி போஜன், ரகுமான் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான அஞ்சாமை. இப்படத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் விதார்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் அஞ்சாமை. தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் பல்வேறு தற்கொலைகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் மாநில காட்சிகள் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு நீட் தேர்வை நடத்துவதில் உறுதியாக இருக்கிறது. இந்நிலையில் நீட் தேர்வு அவசியமா? அதனால் ஏழை எளிய மாணவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை மையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பூ வியாபாரியான விதார்த், தனது மகனை டாக்டராக்க வேண்டும் என்ற ஆசைப்படுகிறார். இதற்காக நீட் பயிற்சிதேர்விற்கும் தனது மகனை கஷ்டப்பட்டு அனுப்புகிறார். இதனால் இவர்களின் குடும்பம் பொருளாதார ரீதியாக எப்படி பிரச்சனையை சந்திக்கிறது. நுழைவுத் தேர்வு நடத்தும் முறை மாணவர்களை எப்படி பாதிக்கிறது. இதனால், அவர்களின் குடும்பம் சந்திக்கும் பிரச்சனை தான் அஞ்சாமை படத்தின் கதை. அதில், விதார்த் சர்க்கார் என்கிற கதாபாத்திரத்தில் நிறைவான நடித்திருந்தார். இது படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறியது. படத்தின் இறுதிக்காட்சி இன்றும் தமிழகம் நீட் தேர்வுடன் எவ்வாறு போராடுகிறது? என்பதை அப்படியே காட்டியுள்ளது. சமூக பொறுப்புள்ள கதைகளை படமாக்கும் இயக்குனர்களை எப்போதும் பாராட்ட வேண்டும். அது போன்ற படங்கள் மக்கள் மனதில் பதிந்துவிடும். மக்கள் அதை என்றுமே மறக்க மாட்டார்கள், அது போன்று இந்த படமும் இருக்கும். சமூக அவலத்தை படமாக இயக்கிய இயக்குனர் சுப்புராமனுக்கு பாராட்டுகள் குவிந்தது.

இந்நிலையில், இப்படத்தில், மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் அளித்த புகாரில் மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலும், நீட் தேர்வை தடுக்கும் வகையிலும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் அஞ்சாமை படத்தில் காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனால், அஞ்சாமை திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடிகைளை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.