நான் மலையாளியா, தமிழ் பெண்ணா என்கிற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. பலவகையான பாடி ஷேமிங்கிற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறேன் என்று நடிகை அபிராமி கூறியுள்ளார்.
விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானத் திரைப்படம் மகாராஜா. விஜய் சேதுபதியின் 50வது படமான இந்த படம் மிகபெரிய அளவில் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இப்படத்தை இயக்கி உள்ளார். இதில், அனுராக் காஷ்யப், பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ். நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, திவ்ய பாரதி, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள அபிராமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-
நிறைய பேர் நான் அமெரிக்காவில் இருப்பதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவங்களை அழைத்தால் விமான டிக்கெட் போடவேண்டும் என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலருக்கு நான் மலையாளியா, தமிழ் பெண்ணா என்கிற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. என்னால் முடிந்தவரை பலருக்கு விளக்கம் கொடுத்துவிட்டேன். இன்னமும் கம்பேக் கம்பேக்னு சொன்ன என்ன அர்த்தம் என்று புரியவில்லை. எனக்கு சினிமா பின்னணி இல்லாததால், பல பிரச்சனைகளை எதிர்த்துத்தான் நானே சினிமாவில் போராடி வருகிறேன்.
மீடியாவில் மட்டுமில்லாமல், வெளியில் இருந்தும் என்னை பாடி ஷேமிங் செய்தார்கள். நான் கொஞ்சம் உயரமாக இருப்பதால், பலவகையான பாடி ஷேமிங்கிற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறேன். அதோட எடை கூடி விட்டதால், பார்க்கும் சிலர், என்ன இப்படி குண்டாகிவிட்டாய் என்று சர்வ சாதரணமாக கேட்பார்கள். இதனால் நான் பலமுறை நமக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி குண்டாகிவிட்டோம், நாம் ஏதாவது மருத்துவ ரீதியான பிரச்சினை இருக்குமோ, மனஅழுத்தம் இருக்கிறோமோ என்று எல்லாம் யோசித்து வருத்தப்பட்டு இருக்கிறேன். மேலும், நான் எடை கூடி இருந்த போது, என்னுடைய போட்டோவை பார்க்கும் போது, எனக்கே ஒரு மாதிரிதான் இருக்கும். காரணம், அந்த நேரத்தில் உடல்ரீதியான பல்வேறு காரணங்களால், என்னுடைய எடை கூடி இருந்தது. அதை என்னால் அப்போது நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.