திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் அயலான். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. ரவிக்குமார் இப்படத்தை இயக்கி இருந்தார். அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. வரும் ஜூலை மாதத்திற்குள் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இத்திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். ருக்மணி படத்தில் நாயகியாக நடிக்கிறார். அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மறைந்த நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோரால் முன்னெடுத்து நடத்தப்பட்ட தேசிய நெல் திருவிழாவில் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். நெல் திருவிழாவில் கலந்து கொள்ள வருகை தந்த சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதனை தொடர்ந்து மேடைக்குச் சென்ற சிவகார்த்திகேயனுக்கு மறைந்த நெல் ஜெயராமன் குடும்பத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனால் நடத்தப்பட்ட உலகப் புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், நெல் ஜெயராமனுக்கு நான் உதவி செய்ததாக கூறினார்கள் அது உதவி அல்ல அது என்னுடைய கடமை என்று தெரிவித்தார்.
அழிந்து போன 174 பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்திருப்பது விவசாயத்தில் ஒரு புரட்சி என்று கூறிய அவர், இது போன்ற நெல் திருவிழாக்கள் ஒவ்வொரு ஊரிலும் நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மேலும் இத்தகைய நெல் திருவிழா செய்தியை நான் திரைப்படங்களின் வாயிலாக நிச்சயம் கொண்டு சேர்ப்பேன் என்று உறுதியளித்தார்.
நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் இந்த திருவிழா நடத்தப்படுவது வழக்கமாகும். மேலும், திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு “உழவர்களின் தோழன் விருது” வழங்கப்பட்டது.