நடிகர் சித்தார்த் ஹீரோவாக கடைசியாக சித்தா படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அவரது நடிப்பும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அடுத்ததாக அவர் முக்கியமான ரோல் ஏற்ற இந்தியன் 2 படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்தச் சூழலில் சித்தார்த்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் அடுத்து இயக்கும் படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். அவரின் 40-வது படமான இதை சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிக்கிறார். இதில் அவர் ஜோடியாக மீதா ரகுநாத் இணைந்துள்ளார். இவர் ‘முதலும் நீ முடிவும் நீ’, ‘குட் நைட்’ படங்களில் நடித்தவர். மற்றும் சரத்குமார், தேவயானி, சைத்ரா உட்பட பலர்இதில் நடிக்கின்றனர். இதைப் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் தொடக்கவிழா இன்று நடக்கிறது.
இந்தப் படம் பற்றி இயக்குநர் ஸ்ரீ கணேஷ் கூறும்போது, “ஒரு தனிமனிதனின் வலிமையான பயணம்தான் படம். இது இயக்குநராக எனக்கும் பார்வையாளர்களுக்கும் புது அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். உலகளவுக்கு பொருந்தக் கூடிய கதை இது” என்றார்.