நடிகர் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பின்போது 20 அடி உயரத்தில் இருந்து தவறிவிழுந்து இறந்த ஸ்டண்ட் மாஸ்டர் உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கமாள் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டரான இவர், தமிழ், தெலுங்கு படங்களில் சண்டை காட்சிகளில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு நேற்று நடந்தது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபிள் செட் அமைத்து சண்டை காட்சி எடுக்கப்பட்டு வந்தது. கார்த்தியை வைத்து அதிரடி சண்டை காட்சிகளை ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்ராயன் எடுத்து வருகிறார். இவருடன் இணைந்து ஏழுமலை பணியாற்றினார். 20 அடி உயரத்தில் சண்டைகாட்சி உருவாக்கப்பட்டுள்ளது. சண்டை காட்சியின்போது கலைஞர்களை கயிறு கட்டி இழுக்கும்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஏழுலையின் தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். உடனடியாக நடிகர் கார்த்திக் மற்றும் சக கலைஞர்கள் படுகாயமடைந்த ஏழுமலையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கமாள் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு நடிகர் கார்த்திக் ஏழுமலையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். நடிகர் கார்த்தி படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.