பெண் பிள்ளையை காதலால் இழந்தால் பெற்றோருக்கு வலிக்காதா: ரஞ்சித்

நடிகரும், பாமகவின் முன்னாள் பிரமுகருமான ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. சுயமரியாதை, நாடக காதல், ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் உள்ளிட்ட பலவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

கவுண்டம்பாளையம் படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே அது சாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கு ரஞ்சித், “இது நாடக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட விழிப்புணர்வு படம்.” என்று விளக்கமளித்திருந்தார். அதே ரஞ்சித் தற்போது, “ஆணவக் கொலை வன்முறை இல்லை.” என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து சேலத்தில் ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மக்களுடன் மக்களாக இணைந்து படம் பார்த்துள்ளேன். நான் உச்ச நட்சத்திரம் எல்லாம் கிடையாது. சாதாரண ஏழை கலைஞன். எனக்கு மக்கள்தான் பெரிய சப்போர்ட். நேர்மையான, குடும்பத்துக்கான படம் எடுத்துள்ளேன். தகப்பனின் வலியை சொல்லும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான படம் எடுத்திருக்கிறேன். இது காதலுக்கு எதிரியான படம் இல்லை. அதேநேரத்தில் நாடகக் காதலுக்கு எதிரியான படம். நாளையை தலைமுறை சிறப்பாக இருக்கும் விதையை விதைத்துள்ளேன். நான் இயக்கி, நடித்த இந்தப் படம் வெற்றி பெற்றிருப்பதில் ரொம்ப சந்தோஷம்.

இந்தப் படம் கடந்த மாதமே வெளியாகியிருக்க வேண்டும். சிலர் வன்மம், சாதிய பிளவு இருப்பதாக தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். என்னை எதிர்க்கும் யாராக இருந்தாலும் படம் பார்த்துவிட்டு பேசுங்கள். படம் பார்க்காமல் எதையும் பேச வேண்டாம். இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு A சான்றிதழ் வழங்கியுள்ளது. இதுபோன்ற சமூக கருத்துகளை சொல்லும்போது அறிவு முதிர்ச்சியோ, வயது முதிர்ச்சியோ இல்லாதவர்கள் படத்துக்கு வராதீர்கள். நல்ல சமுதாயம் படைக்க வேண்டும் என்று விரும்புவோர் மட்டும் வாருங்கள். எங்கிருந்து அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அடிக்கிறார்கள். நான் எதையும் நேரடியாக பேசுகிறேன். என்னை எதிர்க்க முடியாதவர்கள் மறைமுகமாக முதுகில் குத்துகிறார்கள். கவுண்டம்பாளையம் என்பது ஒரு சட்டமன்ற தொகுதி. இது சாதிப்படம் இல்லை. பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது.

நம்வீட்டிலும் அம்மா, மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள் என்று நினைத்து மனசாட்சியுடன் பேச வேண்டும். படிக்கின்ற நம் குழந்தைகள் கைகளிலும் செல்போன் பார்க்கிறார்கள். அவர்கள் மனதில் தினம்தோறும் வன்மத்தையும், சண்டைகளையும் தான் இதிலிருந்து கிளப்பி விடுகிறோம். மற்றபடி ஆரோக்கியமான சூழல் இதில் இல்லை. உங்களை மாதிரி ஊடகங்கள்தான், இந்தியாவின் தூண். அதனால் ஊடகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவசியம்” என்றார்.

ரஞ்சித்திடம் செய்தியாளர்,”ஆணவப் படுகொலை குறித்து அவரின் கருத்தை கேட்டார். அதற்கு பதிலளித்த ரஞ்சித், “ஆணவப் படுகொலைக்கு இந்தப் படத்தில் தீர்வை சொல்லியுள்ளேன். எல்லாவற்றுக்கும் சாயம் பூசக்கூடாது. ஒரு விசயம் நேரடியாக நடக்கும்போது பெற்ற அம்மா, அப்பாவுக்குதான் அந்த வலி தெரியும். சாதாரண உங்கள் பைக்கை திருடியவன் கிடைத்தால் கோபத்தில் உடனடியாக அடிக்கிறோம். ஒரு செருப்பு காணாமல் போனால் கூட, ‘எங்கடா இங்க ஒரு செருப்பு வைத்திருந்தேன்.’ என்று கோபப்படுகிறோம். அவர்களின் வாழ்க்கையே அவர்கள் பிள்ளைகள் தானே. அவர்களின் சுவாசம் எல்லாமே அந்த குழந்தை தான். அப்படியிருக்கும்போது அந்த குழந்தையின் எதிர்காலத்துக்கும், வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏதாவது ஏற்பட்டால் அக்கறையினால் பெற்றோருக்கு கோபம் வருகிறது. அது வன்முறை இல்லை. அது கலவரம் அல்ல. எது நடந்தாலும் நல்லதோ, கெட்டதோ அது எல்லாமே அக்கறையின் காரணமாக நடப்பது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.