தங்கலான் இந்திய சினிமாவிற்கே பெருமையைத் தேடித்தரும்: விக்ரம்

சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 5ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.மேலும் படத்தின் புரோமோஷனுக்காக படக்குழு மெட்ரோ நகரங்களுக்கு பயணித்து வருகின்றது.

முதலில் வெளி மாநிலங்களில் உள்ள மெட்ரோ நகரங்களுக்குச் சென்ற படக்குழு, அங்கு ரசிகர்களைச் சந்தித்து படம் குறித்தான பல சுவாரஸ்யமான தகவல்களைக் கூறி படத்தின் புரோமோசனில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தங்கலான் படக்குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள பெரு நகரங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து தங்கலான் படத்தின் புரோமோசன் வேலைகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 10ஆம் தேதி) மதுரையில் உள்ள மிகவும் புகழ்பெற்ற தனியார் கல்லூரிக்குச் சென்ற தங்கலான் படக்குழுவினர் அங்கு மாணவர்களைச் சந்தித்து அவர்களிடையே படம் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக படத்தின் நாயகன் விக்ரம் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், “தங்கலான் போன்ற படத்தினை எனக்கு கொடுத்த இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பு நாட்களில் படத்தில் நடித்த நாங்கள் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உரையாடிக்கொண்டு இருப்போம். ஆனால் இன்றைய நாட்களில் நாம் யாரைச் சந்திக்கப் போகின்றோம், என்ன மாதிரியான உடையை அணியலாம் என்பது குறித்து பேசிக்கொண்டு உள்ளோம். தங்கலான் போன்ற படத்தினை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு தில் இருக்கணும். தில் இருந்ததால்தான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தங்கலான் படத்தை தூளாக தயாரித்துள்ளார்” என பேசினார்.

படத்தின் புரோமோசனுக்காக நேற்று முன்தினம் கோவைக்கு வந்திருந்த தங்கலான் படக்குழுவினர், செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் தரப்பில் இருந்து பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டது. அதில், தங்கலான் படம் ஆஸ்காருக்குச் செல்லுமா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் கூறுகையில், “நிச்சயம் படத்தினை ஆஸ்காருக்கு கொண்டு செல்லும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம். இந்த ஆண்டு ஃபிலிம் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்போகின்றார்கள். அந்த அறிவிப்பு வந்தவுடன் நாங்கள் தங்கலான் படத்தை பரிந்துரைக்கு அனுப்பவுள்ளோம். அதன் பின்னர், ஃபிலிம் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா தங்கலான் படத்தினை ஆஸ்காருக்கு அனுப்பலாம் என முடிவு செய்தால் கட்டாயம் தங்கலான் படம் ஆஸ்காருக்குச் செல்லும்.

ஃபிலிம் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா நிச்சயம் தங்கலான் படத்தினை தேர்வு செய்வார்கள் என நம்பிக்கையோடு இருக்கின்றோம். நான் விக்ரம் சாரிடம் கூட இது தொடர்பாக பேசிக்கொண்டு இருந்தேன். ஃபிலிம் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா டீமில் இருப்பவர்கள் படத்தின் ட்ரைலரைப் பார்த்துவிட்டு படம் கட்டாயாம் ஆஸ்காருக்கு பரிந்துரைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனக் கூறினார்கள். நாங்களும் மிகவும் ஆர்வமாக இருக்கின்றோம். தங்கலான் டீமிற்கு மிகவும் மகிழ்ச்சியாக அது அமையும். இந்தியாவை தங்கலான் பிரதிநிதிதுவப்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இந்திய சினிமாவிற்கே இந்த படம் பெருமையைத் தேடித்தரும். அப்படியான தங்கலான், ஆஸ்காருக்குச் செல்லும்போது உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்த்து இந்தியாவைப் பாராட்டுவார்கள்” என பேசினார்.