தற்போதைய சூழலில் ஏதோ ஒரு மிகப்பெரிய தவறு இருக்கிறதென நினைக்கிறேன். மூலகாரணத்தை கண்டறிந்து வேரோடு நீக்கும்வரை எதுவும் மாறப்போவதில்லை என்று நடிகை ஆலியா பட் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் மிகவும் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாக, மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில் நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் ஆலியா பட் கூறியுள்ளதாவது:-
மீண்டும் ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமை. பெண்கள் எங்கும் எப்போதும் பாதுகாப்பானவர்கள் இல்லை என்ற புரிதல் வந்திருக்கிறது. நிர்பயா பெருந்தியருக்குப் பிறகும் எதுவும் பெரிதாக மாறவில்லை.
2022 தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது- இந்தியாவில் 30 சதவிகிதம் மருத்துவர்களும் 80 சதவிகிதம் செவிலியர்களும் பெண்களே. மருத்துவத்துறையில் இப்படியான வன்கொடுமைகள் நடப்பது மிகவும் அச்சுறுத்தனாலனது. 2022 முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமான பாலியல் வன்கொடுமைகள். ஒரேநாளில் கிட்டதட்ட 90 பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண்களாகிய நாங்கள் எப்படி உணர்வோம்? எப்படி வேலைக்கு செல்வது? இது ஞாபகத்தில் இருக்கும்போது எப்படி வாழ்வது? பெண்களின் சொந்த பாதுக்காப்பு ஒரு சுமையாக மாறியுள்ளதை இந்தக் கொடூரமான நிகழ்வு மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு… பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள், எல்லா இடங்களிலும் பாதுகாப்பை உயர்த்துங்கள், ஏன் இப்படி நடைபெறுகிறதென ஆராயுங்கள்.
தற்போதைய சூழலில் ஏதோ ஒரு மிகப்பெரிய தவறு இருக்கிறதென நினைக்கிறேன். மூலகாரணத்தை கண்டறிந்து வேரோடு நீக்கும்வரை எதுவும் மாறப்போவதில்லை. பெண்களிடம் அவர்களின் பாதையையும் இடத்தையும் மாற்றுமாறு கூறாதீர்கள். அனைத்து பெண்களுக்கும் இன்னும் சிறந்தவை கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2012-இல் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமான நடிகை ஆலியா பட் கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார். அவரது நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பினைப் பெற்றன. ஹாலிவுட்டில் ஆர்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் வொண்டர் வுமன் நடிகை கால் கோடட் உடன் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அசத்திவருகிறார் ஆலியா பட். தற்போது, ஜிக்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.