“சிலசமயம் நம் மீது வன்மம் வரத்தான் செய்யும். ஆனால், அதற்கு பதில் சொல்லும் இடத்தில் நின்றுவிட்டால் நாம் காலியாகிவிடுவோம். அதைத்தான் இந்த வன்மமும் விரும்புகிறது” என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
‘தங்கலான்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் கூறியதாவது:-
தங்கலான் வெற்றி விழாவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இப்படம் முக்கியமான விவாதத்தை தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு பழக்கப்படாத மொழியில் புதிய அனுபவத்தை அவர்களுக்கு கடத்த வேண்டும் என்பது சாதாரண விஷயமல்ல. தங்கலானை சரியாக புரிந்து கொண்டு அதனை கொண்டாடும் மக்களுக்கு நன்றி. இந்த வெற்றியில் என்னுடன் சேர்ந்த பலரும் உழைத்திருக்கிறார்கள்.
கடுமையான உழைப்பினால் மட்டுமே ஒரு படத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அதேசமயம் ஒரு படத்துக்கு உழைப்பு அவசியமானது. நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய உழைப்பு தான் என்று நம்புகிறேன். நீங்கள் கொடுக்கும் அன்புதான் என்னை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்தி கொண்டேயிருக்கிறது. சிலசமயம் நம் மீது வன்மம் வரத்தான் செய்யும். ஆனால், அதற்கு பதில் சொல்லும் இடத்தில் நின்றுவிட்டால் நாம் காலியாகிவிடுவோம். அதைத்தான் இந்த வன்மமும் விரும்புகிறது. அதை விட அதிகமான அன்பை பொழியும் நீங்கள் இருக்கும்போது நான் ஏன் கவலைப்பட வேண்டும்.
ஒரு படைப்பாளிக்கு ஏன் இந்த அளவுக்கு பாசத்தையும், ஆதரவையும் கொடுக்க வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை. தமிழகம் மட்டுமல்ல ஆந்திரா, படமே வெளியாகாத மகாராஷ்டிரா, டெல்லி போன்ற வடமாநிலங்களில் நம்மை கொண்டாடுகிறார்கள் என்றால், அதற்கு நான் பேசும் கருத்து தான் காரணம். நம்முடைய கலையை அவர்கள் விரும்புகிறார்கள். அதனை சரியாக புரிந்துகொள்ளும் பல லட்சம் மக்கள் இருக்கும்போது நமக்கு எந்த கவலையுமில்லை என்ற உற்சாகத்தை தங்கலான் கொடுத்துள்ளது. எழுத்தாளர் அழகிய பெரியவனின் வசனங்கள் படத்துக்கு உயிரூட்டி இருக்கிறது. கலை இயக்குநர், படத் தொகுப்பாளர், ஸ்டன்ட் மாஸ்டர் என அனைவரும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளார்கள்.
ஞானவேல் போல ஒருவரை நான் பார்க்காமல் இருந்திருந்தால் என்னுடைய திரைப்பயணம் கடுமையாக இருந்திருக்கும். அதனை இலகுவாக்கியிருக்கிறார். அவரிடம் நான் என்றைக்குமே நன்றியுடன் இருக்க கடமைப் பட்டியிருக்கிறேன். பட்ஜெட் தொடர்பான எந்த அழுத்தத்தையும் எனக்கு கொடுக்காமல் பார்த்துக்கொண்டார். நிறைய பேர் என் காது பட, ‘படம் ரிலீஸ் ஆகாது நிறைய பிரச்சினை இருக்கிறது, அவரால் ரிலீஸ் செய்ய முடியாது’ என பேசினார்கள். ஆனால் எனக்கு ஞானவேல் மீது பெரிய அளவில் நம்பிக்கை இருந்தது. அதேபோல அவர் படத்தை அற்புதமாக ரிலீஸ் செய்து காட்டினார்.
இன்றைக்கு காலையில் கூட அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘நீங்க தயாரா இருங்க. பெரிய பட்ஜெட்ல, முழுக்க முழுக்க கமர்ஷியலா படம் பண்ணுவோம். பெரிய ஹீரோ ஒருத்தர நான் கூப்டு வரேன். நான் உங்களை நம்புகிறேன். உங்க கிராஃப்டுக்கு நான் ரசிகன்’ என்று சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மக்களை படத்துக்கு அழைத்து வந்ததற்கு முக்கியமான காரணம் விக்ரம் தான். ரசிகர்கள் மீதும், கலையின் தீரா காதலைக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.